Home இந்தியா ராஜராஜ சோழனை இழிவுபடுத்தவில்லை – பா.இரஞ்சித் :

ராஜராஜ சோழனை இழிவுபடுத்தவில்லை – பா.இரஞ்சித் :

by admin


திரைப்பட இயக்குநர் பா.இரஞ்சித், ராஜராஜ சோழன் ஆட்சியை விமர்சித்துப் பேசிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கான எதிர்வினையும் வலுத்துள்ளது. இதுதொடர்பாக, பா.இரஞ்சித் மீது காவல்நிலையத்தில் வழக்கும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூரில் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில்  பேசிய பா.இரஞ்சித்    “தனித் தொகுதிகளைத் தவிர்த்து, மற்ற தொகுதிகளில் அரசியல் கட்சிகள், சாதி அடிப்படையில்தான் வேட்பாளர்களை நிறுத்துகிறார்கள். அதை வெளிப்படையாக யாரும் சொல்வதில்லை. திராவிடத்திலிருந்தும், தமிழ் தேசியத்திலிருந்தும் பட்டியலின மக்களைத் தனிமைப்படுத்துகிறீர்கள் என்கிறார்கள். ஏற்கெனவே அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுத்தானே இருக்கிறார்கள். ஊரிலிருந்து சேரி தனித்துவிடப்பட்டுள்ளது. அந்தச் சேரியிலிருந்து சேரிப் பிரச்னையைப் பேச வந்திருக்கிறேன்” என்று   தெரிவித்தார்

மேலும் அவர், “ராஜராஜசோழன் ஆட்சிக்காலத்தைப் பொற்காலம் என்று சொல்கிறார்கள். ஆனால், ராஜராஜசோழன் ஆட்சிக்காலத்தை இருண்ட காலம் என்று நான் சொல்கிறேன். ராஜராஜசோழன் எங்கள் சாதியைச் சேர்ந்தவர் என்று நிறைய பேர் போட்டி போடுகிறார்கள். ஆனால், என் மக்களுடைய நிலம் ராஜராஜன் ஆட்சியில்தான் பறிக்கப்பட்டது. சாதிய ரீதியில் மிகப்பெரிய ஒடுக்குமுறை அவருடைய ஆட்சியில்தான் ஆரம்பிக்கப்பட்டது. அவரின் ஆட்சியில்தான், 400 பெண்கள் விலைமாதர்களாக மாற்றப்பட்டனர். தேவதாசி முறை அவருடைய ஆட்சிக்காலத்தில்தான் அமல்படுத்தப்பட்டது” என்று பேசியது பல்வேறு தரப்பிலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதற்குப் பலர் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், அவருடைய கருத்துக்கு எதிராகவும், ஆதரவாகவும் சமூக வலைதளங்களில் விவாதங்கள் எழுந்துள்ளன. சமூகத்தில் பிரிவினையைத் தூண்டும்விதமாகப் பேசியதாக பா.இரஞ்சித் மீது திருப்பனந்தாள் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இந்த சர்ச்சை குறித்து தமிழ் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசனிடம் கேட்டபோது, “ராஜராஜ சோழன் காலத்தில்தான் சாதியம் வலுப்பெற்றது என்று சொல்பவர்கள், அதற்கான சான்றுகளைத் தர வேண்டும். மன்னர்கள் காலத்தில், ஒப்பீட்டளவில் நல்ல அரசாக அவன் இருந்துள்ளான்” என்றார். அவர் மேலும் கூறுகையில், “சோழர்களுக்கு முன்பே வர்ணாசிரமம் இருந்தது. ராஜராஜன் ஆட்சியில் இருந்ததே 27, 28 ஆண்டுகள்தான். அதற்குள் அவரால் முடிந்ததைச் செய்துள்ளார். கெடுதல் எதையும் அவர் செய்யவில்லை. ராஜராஜ சோழன்தான் முதன்முதலில் பறையர் சமூக மக்களுக்கு இறையிலி நிலம் கொடுத்தவர். அதாவது, வரி இல்லாத நிலம். இதற்குக் கல்வெட்டு சான்று இருக்கிறது.

தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டி, அந்தக் கோயிலைத் திறந்தபோது, அதில் பணியாற்றியவர்களுக்கு ராஜராஜ சோழன் சிறப்புப் பட்டங்களைக் கொடுத்தார். தலைமைப் பொறியாளர் சிங்காரமல்லர் என்று இருந்தார். அவருக்கு ராஜராஜ பெருந்தச்சன் என்ற பட்டத்தை ராஜராஜ சோழன் கொடுத்தார். அரச அறிவிப்புகளை பறையறைந்து வெளியிடுபவர் பறையர். அதனால்தான் பறையர் என்று பெயர் வருகிறது. அவர்களுக்கு, `ராஜராஜ பெரும் பறையன்’ என்ற பட்டத்தை ராஜராஜ சோழன் கொடுக்கிறார். பெரிய கோயிலில் முடிதிருத்துபவர்களுக்கு, `ராஜராஜ பெரு நாவிதன்’ என்று பட்டம் கொடுத்திருக்கிறார். ராஜராஜனின் இயற்பெயர் அருண்மொழித்தேவன். ராஜராஜன் என்பது அவருக்குக் கொடுக்கப்பட்ட பட்டம். தனக்குக் கொடுக்கப்பட்ட அந்தப் பட்டத்தை, மற்றவர்களுக்கு இவர் கொடுக்கிறார். யாரையும் சாதிவேறுபாடு இல்லாமல் சமத்துவமாக நடத்துகிறார். குடவோலை முறை மூலம் பஞ்சாயத்து ஆட்சி முறையைக் கொண்டுவந்தவர், அவர். ஒரு ஜனநாயக ஆட்சி முறையை, உள்ளாட்சி முறையைக் கொண்டுவந்தது ராஜராஜன் சோழன்தான். வேளாண்மையை விரிவுபடுத்தி புதிய புதிய கால்வாய்களை உருவாக்கியவர் அவர். `மன்னராட்சி என்பது ஜனநாயக ஆட்சியைவிட சிறந்த ஆட்சி முறை’ என்று யாராலும் சொல்ல முடியாது. ஆனால், அந்த ஆட்சி முறைக்குள் ஒரு சிறப்பான ஆட்சியை அவர் நடத்தியுள்ளார் என்பதை பா.இரஞ்சித் போன்றவர்கள் பார்க்கவேண்டும்” என்றார்.

சோழர் ஆட்சி முறை குறித்து பல ஆய்வுகள் மேற்கொண்டு புத்தகங்கள் எழுதியிருக்கும் பேராசிரியர் அருணனிடம் பேசினோம். “சாம்ராஜ்ய காலத்தில் நிலக்குவியல் இருந்தது. நிலம் முழுவதும் மன்னருக்குச் சொந்தம். அந்த நிலங்களை, குறுநில மன்னர்களுக்கும் நிலப் பிரபுக்களுக்கும் கொடுத்துவிடுவார்கள். அவர்கள் மன்னருக்குக் கப்பம் கட்டுவார்கள். பஞ்சமர்களிடம் இருந்த நிலத்தைப் பறித்து குறுநில மன்னர்களிடம் கொடுத்துவிட்டார்கள் என்று சொல்ல முடியாது. அன்றைக்கு இருந்த அமைப்பு முறையே, நிலப்பிரபுத்துவ அமைப்புமுறைதான். அந்த நிலப்பிரபுத்துவ அமைப்பு முறையின் வெளிப்பாடாகச் சாதியமும், ஆணாதிக்கமும் இருந்தன. அதில்தான், தேவதாசி முறை உருவானது. இவர்களுக்கு முன்பாகவே, சங்க காலத்தில் பரத்தையர் இருந்தனர். களப்பிரர் காலத்தில் பரத்தையர், கணிகையர் இருந்தனர். மணிமேகலையும் மாதவியும் கணிகைகள்தானே.

பெண்களைப் பொது மகளிராகப் பாவிப்பது சங்க காலத்தில் இருந்தது; அடுத்ததாகக் களப்பிரர் காலத்திலும் இருந்தது. அதற்கடுத்தாக, சாம்ராஜ்ய காலத்திலும் வந்தது. சோழர்கள் காலத்தில் பெரும் கோயில்களை நிர்மாணம் செய்து, அதனுடன் தேவதாசிகளை இணைத்துவிட்டனர். தேவதாசிகள், கடவுளுக்குச் சொந்தம் என்றார்கள். உண்மையில், அவர்களை மன்னரும், குறுநில மன்னர்களும், நிலப்பிரபுக்களும் கோயில் பூசாரிகளும்தான் அனுபவித்தார்கள். ஆகவேதான், கோயிலைச் சுற்றி ஒருபுறம் பூசாரிகள் தெருவும், மறுபுறம் தேவதாசிகள் தெருவும் இருந்தன. இதற்கெல்லாம் சான்றுகள் உள்ளன.

படையெடுப்பில் வெற்றிகொள்ளப்பட்டவர்களைப் பிடித்துக்கொண்டுவந்து பஞ்சமர்கள் என்று ஆக்கினார்கள். அந்தப் பெண்களை, தேவதாசிகள் என்று ஆக்கினார்கள். அப்படித்தான் அந்த முறை உருவானது. போர்க்கைதிகளாகப் பிடித்துவரப்பட்டவர்களை வைத்துத்தான், பெரிய, பெரிய கோயில்களை நிர்மாணித்தார்கள். தஞ்சையில் ராஜராஜ சோழன் பெரிய கோயிலை அப்படித்தான் கட்டினான். ராஜராஜ சோழனின் மகன் ராஜேந்திர சோழன் கங்கைகொண்ட சோழபுரத்தில் ஒரு கோயிலைக் கட்டினான். அந்தக் கோயில்களில் பிராமணப் பூசாரிகள் அர்ச்சகர்கள் ஆக்கப்பட்டனர். அந்த பிராமண பூசாரிகளுக்கு இலவசமாக நிலங்கள் வழங்கப்பட்டன. அதுவும் முழுமுழு கிராமங்களாகக் கொடுக்கப்பட்டன. அவைதான் பிரமம் தேயங்கள், சதுர்வேதி மங்கலங்கள். இதற்கான கல்வெட்டு ஆதாரங்கள் நம்மிடம் உள்ளன. ராஜராஜ சோழன் ஆட்சிக்காலத்தில்தான் சாதிய அமைப்பு முறை நிலைநிறுத்தப்பட்டது என்பதற்கும் ஆதாரங்கள் உள்ளன.

அதே நேரத்தில், சோழர்கள் ஆட்சியில் நீர்ப்பாசன முறை ஒழுங்குபடுத்தப்பட்டு, விவசாயம் செழித்தோங்கியது. அதனால்தான், ராஜராஜ சோழனால் அவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்தை கட்டியாள முடிந்தது. தஞ்சைப் பெரிய கோயிலுக்குள் அற்புதமான ஓவியங்கள் எல்லாம் இருந்தன. எல்லாம் இன்று அழிந்துவிட்டன. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக இப்படியொரு பிரமாண்டமான கோயிலைக் கட்டியிருப்பது மிகப்பெரிய அதிசயம். அந்த அதிசயத்தைக் கொடுத்ததில் ராஜராஜனுக்கு ஒரு பெருமை உண்டு. அதேநேரத்தில் அவன் ஒரு ராஜாதான். நிலப்பிரபுத்துவ ராஜாதான். அவன்தான், இங்கு வர்ணாசிரமத்தை நிலைநிறுத்தியவன். வர்ணாசிரமம் என்பது சாதியமும், ஆணாதிக்கமும் கொண்டது. ஆணாதிக்கம் என்பது தேவதாசி முறை மூலம் வெளிப்பட்டது. நான்கு வர்ணங்கள், அந்த நான்கு வர்ணங்களுக்குக் கீழ் பஞ்சமர்கள், தீண்டாமை எல்லாம் சாம்ராஜ்ய காலத்துக்குக் கொஞ்சம் முன்பாகவே வந்துவிட்டன. அதையெல்லாம் ராஜராஜ சோழன் நிலைநிறுத்தினான் என்பது உண்மை. அதற்கான ஆதாரங்கள் உள்ளன.

மன்னராட்சி முறை அப்படித்தான் இருந்தது. அந்தக் காலகட்டத்தில், மன்னர்கள் அப்படித்தான் இருந்தார்கள். அவர்களைப்போய், இன்றைக்கு நாம் விமர்சனம் செய்துகொண்டிருப்பது தேவையில்லை என்றே நினைக்கிறேன். அதே நேரத்தில், அந்த ஆட்சி முறையை  விமர்சனம் செய்தால், ‘ராஜராஜ சோழனை இழிவுபடுத்திவிட்டார்கள்’ என்று சொல்வதும் நியாயமல்ல.

பா.இரஞ்சித் போன்றவர்கள் ராஜராஜ சோழன் ஆட்சியின் இன்னொரு பகுதியையும் பார்க்க வேண்டும். பாசன வசதிகளை உருவாக்கியது, கட்டடக் கலைகளை வளர்த்தது, கலைநுட்பம் வாய்ந்த பிரமாண்டமான கோயில்களைக் கட்டியது என்பதையெல்லாம் சேர்த்துப் பார்க்க வேண்டும் என்பது என் கருத்து” என்றார் அருணன்.

பற்ற வைத்து விட்டார் பா.இரஞ்சித். அது இப்போதைக்கு அணையுமென்று தோன்றவில்லை.

#பா.இரஞ்சித் #ராஜராஜ சோழன் #பொற்காலம்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More