மதுரை மாவட்டத்திலுள்ள எஸ்.வலையபட்டி கிராம அங்கன்வாடியில் பட்டியலினப் பெண்கள் உணவு வழங்குவதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தமையினால் அவர்களை ஆட்சியர் அலுவலகம் பணியிடமாற்றம் செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மாநில மனித உரிமை ஆணையகம் அது குறித்து விளக்கம் கோரியுள்ளது
கடந்த ஜூன் 3ஆம் திகதி மதுரை மாவட்டத்தில் வெற்றிடமாக உள்ள அங்கன்வாடி பணியிடங்களை நிரப்ப மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில் அதே ஊரைச் சேர்ந்த 2 பட்டியலினப் பெண்கள் அங்கன்வாடி சமையலராகவும் உதவியாளராகவும் பணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டிருந்தனர். எனினும் குறித்த ஊரைச் சேர்ந்த மக்களில் சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன் இருவரையும் பணியிடமாற்றம் செய்யுமாறு கோரிக்கை விடுத்தனர்.
அத்துடன் அவர்களை மாற்றும்வரை அங்கன்வாடிக்குக் குழந்தைகளை அனுப்பபோவதில்லை எனவும் தெரிவித்து குழந்தைகளை அங்கன்வாடிக்கு அனுப்பாமல் வைத்திருந்தனர். இதனால், கடந்த ஒரு வார காலமாக அப்பெண்கள் சமைத்த உணவு வீணாகிப் போனதனையடுத்து தமிழ்நாடு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட இணை இயக்குநர் மேற்கொண்டிருந்த நிலையில் பட்டியலினப் பெண்கள் இருவரையும் மதுரை மாவட்ட ஆட்சியர் பணியிடமாற்றம் செய்துள்ளார்.
ஊடகங்களில் இது பற்றிய செய்திகள் வெளியானதையடுத்து, இந்த விவகாரத்தைத் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மாநில மனித உரிமைகள் ஆணையகம் அதற்கு கண்டனம் தெரிவித்துள்ளதுடன் விளக்கமுதும் கோரியுள்ளது. கிராம மக்களில் சிலரது நெருக்கடிக்குப் பயந்து அங்கன்வாடி பணியாளர்களை இடமாற்றம் செய்தது ஏன் எனவும் மதுரை மாவட்ட நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பியுள்ளது
#பட்டியலினப் பெண்கள் #இடமாற்றம் #மனிதஉரிமைஆணையகம்