180
“எந்தவொரு பாதுகாப்பு ஏற்பாடுகளுமின்றி ஆவா குழுவுடன் கலந்துடையாடுவதற்கு நான் தயாராகவுள்ளேன்” என வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். கொக்குவில் புகையிரத நிலைய அதிபர் மீதான தாக்குதலுக்கு பதிலளிக்குமுகமாக ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார். இத்தாக்குதலானது வட மாகாணத்தை மையப்படுத்தி ஆயுத வன்முறையிலும் பல்வேறு சமூக விரோத செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வரும் ஆவா குழுவினரால் நடாத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
இவர்களின் பிரச்சனை தொடர்பாக ஜனநாயக ரீதியிலான கலந்துரையாடலை இக்குழுவினருடன் மேற்கொள்ள தான் தயாராக இருப்பதாக ஆளுநர் தெரிவித்துள்ளார். ஜனநாயகத்திற்கு எதிரான எந்தவொரு நடவடிக்கையினையும் நாட்டின் எப்பகுதியிலுமுள்ள எந்தச் சமூகத்தின் மீதும் மேற்கொள்ள அனுமதிக்க முடியாது. எந்தவொரு பிரச்சனையும் தீர்ப்பதற்கு சிறந்த வழி ஜனநாயக ரீதியிலான கலந்துரையாடல்களை மேற்கொண்டு ஜனநாயகத்தைப் பாதுகாப்பதேயாகும் என ஆளுநர் வலியுறுத்தினார். இதற்காக தான் எந்நேரமும் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
நான் நேரிலே சென்று ஆவா குழுவினரை சந்தித்து அவர்களுடைய பிரச்சனை தொடர்பாக கலந்துரையாடவுள்ளேன். வடக்கு மக்களின் வாழ்க்கையினை சிதைப்பதற்கான காரணம் என்ன என வினவவுள்ளதாகவும் தெரிவித்த ஆளுநர் இதற்காக எவ்வித பாதுகாப்பு ஏற்பாடுகளுமின்றி அவர்களை சந்திக்கத் தயாராக இருப்பதாக பகிரங்க அழைப்பினை விடுத்துள்ளார் .
#ஆவா குழு #கொக்குவில் #ஆளுநர் #சுரேன் ராகவன்
Spread the love