ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக தெரிவித்து கோவையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல்துறையின் நுண்ணறிவுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்
முகமது உசைன், ஷாஜகான், ஷேக் சபியுல்லா ஆகிய மூன்று சந்தேக நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் மூவரும் கோவை அரச மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட பின்னர் இன்று, சனிக்கிழமை காலை, மாவட்ட முதன்மை நீதிபதி சக்திவேல் வீட்டில் முன்னிலைப் படுத்தப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து சந்தேகநபாகள் மூவரையும் எதிர்வரும் 28ம் திகதிவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இவர்கள் மூவரும் ஐ.எஸ் அமைப்பின் ஆதரவாளர்கள் எனவும், கோவையில் அந்த அமைப்புக்கு அடித்தளம் அமைத்து தீவிரவாதத் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாகவும் கோவை மாநகர காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் வீடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் கைப்பற்றப்பட்ட பொருட்கள் மற்றும் ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை கோவை தெற்கு பகுதியைச் சேர்ந்த மற்றுமொரு சந்தேகநபரான 38 வயதாகவும் இதயத்துல்லா என்பவரும் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இவர் இலங்கையில் நடைபெற்ற உயிர்த்தஞாயிறுத் தாக்குதல்களின் முக்கிய சூத்திரதாரி சஹ்ரானுடன் சமூக ஊடகங்கள் மூலம் தொடர்பில் இருந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னரும் ஐஎஸ் அமைப்புடன் தொடர்புள்ளதாக தெரிவித்து கோவையில் சிலர் கைது செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. #ஐஎஸ்பயங்கரவாத அமைப்பு #கோவைமாநகரகாவல்துறை