பிரபாகரனுக்கு நிகர் அவரே ஆவார். இலங்கையில் இனிமேல் எவரும் பிரபாகரன் ஆகிவிட முடியாது. இந்தநிலையில், பிரபாகரனுடன் இஸ்லாமியப் பயங்கரவாதிகளை ஒப்பிடுவது அறிவீனம் என இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில் முஸ்லீம் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன முஸ்லிம்களின் மத்தியிலிருந்து ஒரு பிரபாகரன் உருவாக இடமளிக்க வேண்டாம் எனத் தெரிவித்திருப்பது அபத்தமான ஒன்று.
இலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடத்திய கும்பலுக்கென்று எதுவுமே கிடையாது. இவர்களுக்கு முஸ்லிம் சமூகத்திடடமிருந்து எந்த ஆதரவும் கிடையாது. அப்படியான கும்பல் பிரபாகரன் என்கிற தகுதிக்கு வந்து விடுவார்கள் என்று அச்சப்படுகின்ற அதீதமான அச்சப்போக்கு அபத்தமானது. தமிழ் மக்களின் நியாயமான அரசியல் கோரிக்கைகளை இலங்கை அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் அவரின் இயக்கத்தினருக்கும் எனப் பெரும் ஆதரவுத் தளமிருந்தது. இப்போதும் இருக்கின்றது. அவர்களுக்கென்று கட்டமைப்பு இருந்தது. அரசியல் கொள்கை இருந்தது. அவர்களுக்கென்று ஒரு விடுதலைப் போராட்டம் வடிவமைக்கப்பட்டிருந்தது என ரவூப் ஹக்கீம் சுட்டிக்காட்டியுள்ளார்.
நோர்வேயின் ஏற்பாட்டில் சமாதானப் பேச்சுக் காலத்தில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை கிளிநொச்சியில் தாம் நேரில் சந்தித்ததாக தெரிவித்த அவர், தனக்கும் தனது கட்சியினருக்கும் பலத்த வரவேற்பு வழங்கியிருந்தார். சுமார் ஐந்து மணித்தியாலங்கள் தங்களுடன் அவர் மனம் விட்டுப் பேசினார் எனக் குறிப்பிட்ட ரவூப் ஹக்கீம், துரதிஷ்டவசமாக அந்தச் சமாதானக் காலம் நீடிக்கவில்லை. மீண்டும் போர் ஆரம்பமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை உரிமைகளைக் கேட்டு நிற்கும் தமிழ் மக்கள் மீதான இராணுவத் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையிலேயே அவர்களின் தாக்குதல்கள் இருந்தன எனக் கூறியுள்ள ரவூப் ஹக்கீம் விடுதலைப்புலிகளின் தாக்குதல்கள் குறுகிய நோக்கத்தில் இருந்ததில்லை எனவும் வலியுறுத்தி உள்ளார். #Prabhakaran #Rauffhakeem #பிரபாகரன் #ரவூப்ஹக்கீம் #உயிர்த்த ஞாயிறு