இலங்கை பிரதான செய்திகள்

திருகோணமலை பேருந்து நிலையத்தையும், புத்தர் ஆக்கிரமித்தார்…

கிழக்கு மாகாணம் திருகோணமலையில் பேருந்து நிலையத்திற்கு முன்பாக புதிதாக புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.  திடீரென வைக்கப்பட்டுள்ள இந்த புத்தர் சிலை சிறுபான்மை மத மக்களிடையே விசனத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மத இன ஆக்கிரமிப்புகளால் திருகோணமலை நகரமும் மாவட்டமும் தனது அடையாளங்களை இழந்து வருகின்றது.

2005ஆம் ஆண்டு சமாதான காலத்தில் திருகோணமலையில் வைக்கப்பட்ட புத்தர் சிலையை தொடர்ந்து அங்கு பல முரண்பாடுகள் ஏற்பட்டு பல உயிர்கள் காவு கொள்ளப்பட்டன. திருகோணமலை நகர சபையின் அனுமதியின்றி, அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் விதமாக வைக்கப்பட்டுள்ள குறித்த புத்தர் சிலையை பிரித்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அத்துடன் கடந்த சில நாட்களின் முன்னர் கன்னியா வெந்நீர் ஊற்று பகுதியை ஆக்கிரமிக்க முயன்றமைக்கு அப்பகுதியை சேர்ந்த மக்கள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டனர். இதனாலும் மாவட்டத்தில் மதநல்லிணக்கம் மீதான நம்பிக்கை பாதிக்கப்பட்டது.

இதேவேளை நேற்றைய தினம் முல்லைத்தீவு செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் அடாத்தாக அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு அனுராதபுரத்தில் இருந்து வருவிக்கப்பட்ட மக்கள் எதிர்ப்பு அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் விதத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

வடக்கு கிழக்கில் இந்து ஆலய பகுதிகளில் தமிழ் மக்களுக்கு விருப்பமற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ள புத்தர் சிலைகளை அகற்றுவோம் என்று பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் நேற்று முந்தினம் யாழ்ப்பாணத்தில் கூறியுள்ளமையும் இங்கே நினைவுகூரத்தக்கது. #அத்துரலியேரத்தனதேரர் #திருகோணமலை #கிழக்குமாகாணம்  #புத்தர்சிலை #கன்னியா வெந்நீர்ஊற்று

1 Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

  • தமிழ் மக்களுக்கு விருப்பமற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ள புத்தர் சிலைகளை அகற்றுவோம் என்று பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் நேற்று முந்தினம் யாழ்ப்பாணத்தில் கூறியுள்ளமை உண்மைதான். அவரையும் அவரது கூட்டத்தினரையும் பதாதைகள் கட்டி வரவேற்பதற்கு ஒரு இலட்சம் ஆவது செலவழித்து இருக்க வேண்டுமே? இதற்கு எங்கள் மனம் குளிர ஏதாவது சொல்லக் கூடாதா? அதுக்குத்தான் இப்பிடி எல்லாம் சொல்லி இருக்கார். வட மாகாண மக்கள் இவரிடம் எல்லாம் போய் இப்படிப் பிச்சை கேட்க வேண்டியிருக்கின்றது. நம்புங்கள். இவை எல்லாம் விளையாட்டுக்குச் சொன்னவை. என்ன செய்றது. அவங்களுக்குப் பதவிகள் “சும்மா” கெடச்சதுதானே! மக்களுக்குப் பயப்படத் தேவையில்லையே! ரத்தன தேரரால் ஒன்னு மட்டும் செய்ய ஏலுங். பேரூந்து நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையை வேண்டுமென்டால் அகற்றி நகரசபை முற்றத்தில் வைக்கமுடியும். வேணுமின்னால் சொல்லுங்க. வாயால பேசுறதுக்கு பெற்றோல் செலவா? இல்லாட்டி டீசல் செலவா? சும்மா சொல்ல வேண்டியதுதானே அப்பா. எழுதிதாரதென்டா பேனைச் செலவு மை செலவு எல்லாம் இருக்கு.