பங்குப் பரிவர்த்தனை குறித்த விவரங்களைப் பங்குச் சந்தையில் சமர்ப்பிக்காத குற்றத்துக்காக பிரபலமான தொலைக்காட்சி நிறுவனமான என்டிடிவி நிறுவனத்துக்கு 12 லட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தை ஆரம்பித்த பிரனாய் ராய் மற்றும் ராதிகா ராய் ஆகிய இருவரும் பங்குப் பரிவர்த்தனையில் மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டதனையடுத்து அவர்கள் இருவரும் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குப் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையகம் தடை விதித்திருந்தது.
இந்த நிலையில் தற்போது, பங்குப் பரிவர்த்தனை விவரங்களை முறையாகச் சமர்ப்பிக்காத குற்றத்துக்காக என்டிடிவி நிறுவனத்துக்கு 12 லட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
2008ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் என்டிடிவி நிறுவனத்தின் 40 லட்சம் பங்குகளை இந்தியா புல்ஸ் பினான்சியல் சர்வைசஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அதேபோல, 2008 ஜூலையில் என்டிடிவியின் 20.28 சதவிகிதப் பங்குகளை அதன் பங்காளர்கள் கைப்பற்றியுள்ளனர். இந்தப் பங்குப் பரிவர்த்தனை விவரங்களை மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசியப் பங்குச் சந்தையில் என்டிடிவி நிறுவனம் சமர்ப்பிக்காமல் பங்குப் பரிவர்த்தனை விதிமுறைகளை மீறியமை கண்டறியப்பட்டுள்ளதனையடுத்து இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
#என்டிடிவி நிறுவனத்துக்கு #அபராதம் #பங்குப் பரிவர்த்தனை