இன்று உலக அதிகள் தினம். பல்வேறு காரணங்களால் உலகில் அகதிகள் நாடற்று, வீடற்று அலையும் இன்றைய நாட்களில் ஈழத்திலும் மக்கள் அகதிகளாக அல்லல்படுகின்றனர். முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விடுவிக்க இராணுவ ஆக்கிரமிப்பு முகாமின் முன்னே போராடுகின்றனர்.
உலக அகதிகள் தினத்தில் தத்தளிக்கும் அந்த மக்களின் துயரம் ஒரு குறியீடு. இலங்கையின் அரசியல் நிலமைகள், அதனால் ஏற்பட்ட பொருளாதார நிலமைகள் இன்னமும் அகதிகளாக பலர் புலம்பெயர்கின்றனர். உடமைகள், உறவுகள் மற்றும் உரிமைகளை இழந்து, எவ்வித ஆதரவும், வசதியும் இன்றி வாழும் மக்களே அகதிகள். இவர்கள் சொந்த நாட்டுக்கு உள்ளேயோ அல்லது நாடு கடந்தோ அகதிகளாக வாழ்கின்றனர்.
இவ்வாறு கட்டாயப்படுத்தப்பட்டும், சூழ்நிலை காரணமாகவும் அகதிகளாக வாழும் பெண்கள், ஆண்கள், குழந்தைகள், முதியோர் ஆகியோருக்கு பாதுகாப்பு மற்றும் வாழ்க்கையை முன்னேற்றும் நோக்கத்துடன், ஐ.நா., சார்பில் ஜூன் 20ம் தேதி உலக அகதிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
உலகில் அகதிகள் உருவாவதற்கு இனவெறி, அரசியல், மதம், வன்முறை, வறுமை, வேலையில்லா திண்டாட்டம் ஆகியவையே காரணம். இவர்களது உரிமைகளை திரும்ப வழங்கவேண்டும். அவர்களும் சமூகத்தில் மற்றவர்களைப் போல நடத்தப்பட வேண்டும் என்பதை இத்தினம் வலியுறுத்துகிறது.
உலகளவில் 6 கோடி பேர் அகதிகளாக வாழ்கின்றனர் என யு.என்.எச்.சி.ஆர். ஆய்வு தெரிவிக்கிறது. இது மக்கள் தொகை அடிப்படையில் உலக நாடுகளின் வரிசையில் 24வது இடம். 122 பேருக்கு ஒருவர் அகதியாக உள்ளனர். சிரியாவின் உள்நாட்டுப் போர். தவிர தெற்கு சூடான், சோமாலியா, நைஜீரியா, காங்கோ உள்ளிட்ட நாடுகளில் இருந்து அதிக அகதிகள் இடம் பெயர்கின்றனர்.
உலக அகதிகளின் எண்ணிக்கையில் இலங்கை அகதிகளும் கணிசமான இடத்தைப் பிடிக்கின்றனர். இன்னும் பல சர்வதேச நாடுகளில் அவர்கள் அகதிமுகாங்களில் வாழ்கின்றனர். தமிழ் நாட்டின் பல்வேறு அகதிமுகாங்களிலும் ஈழத் தமிழர்கள் அகதிகளாக வாழ்கின்றனர். #கேப்பாபுலவுமக்கள் #உலகஅதிகள்தினம் #இராணுவஆக்கிரமிப்பு