ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடி மக்களுக்கு பல்வேறு நோய் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றில் தமிழக அரசு பதில் மனுதாக்கல் செய்துள்ளது.
தூத்துக்குடியில் ‘சீல்’ வைக்கப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக்கோரி வேதாந்தா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றில் தொடர்ந்த நேற்றையதினம் விசாரணைக்கு வந்திருந்தது. இதன்போது பதில் மனு தாக்கல் செய்த தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மை செயலாளர் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை அமைக்க பல்வேறு நிபந்தனைகளுடன் தான் வேதாந்தா நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. சுற்றுச்சூழல், காற்று, தண்ணீர் மாசடையும் வகையில் ஆலைக்குள் கழிவுகளை தேக்கி வைத்ததால், 2013-ம் ஆண்டு விஷவாயு கசிவு ஏற்பட்டதை அடுத்து, பொதுமக்கள் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.
கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரியில் ஆலைக்கான உரிமத்தை புதுப்பிக்க அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்ட போது நேரில் ஆய்வு செய்தபோது விதிமுறைகளை ஆலை நிர்வாகம் பின்பற்றாத காரணத்தால் ஆலையை தொடர்ந்து இயக்கக்கூடாது என 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் உத்தரவிடப்பட்டது.
ஆனால் 2018-ம் ஆண்டு மே மாதம் நடத்தப்பட்ட ஆய்வில், தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை மீறி ஆலை நிர்வாகம் உற்பத்தியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் ஆலையை மூடவும், மின்இணைப்பை துண்டிக்கவும் உத்தரவிடப்பட்டது.
நிலத்தடி நீர் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்திய காரணத்தால்தான் ஆலை மூடப்பட்டது. இந்த ஸ்டெர்லைட் ஆலையின் 4 யூனிட்டுகள் காற்றையும், நிலத்தடி நீரையும் மாசுபடுத்துகின்றதுடன் ஆலைகள் வெளியேற்றும் கழிவுகள் சூரிய ஒளியில் ஆவியாகிவிடுகின்றன. இந்த ஆலை ஏற்படுத்தும் மாசுவின் காரணமாகவே, தூத்துக்குடி மக்களுக்கு பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன. குடிநீரும் குடிப்பதற்கு பயன்படுத்த முடியாத தண்ணீராக மாறியுள்ளது. ஆலை மூடிய பிறகு நிலத்தடி நீரின் தரம் மேம்பாடு அடைந்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலை, ஒவ்வொரு ஆண்டும் 2 ஆயிரம் கோடி ரூபா லாபம் ஈட்டியுள்ளது. அதனால், இந்த ஆலையை மூடியதால் இழப்பு எதுவும் இல்லை. எனவே, வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை 27ம்திகதி தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
#ஸ்டெர்லைட் ஆலை #தூத்துக்குடி மக்களுக்கு #நோய் #தமிழக அரசு