சுகாதாரத்தில் தமிழகம் பின்னடைவைச் சந்தித்துள்ளதாக நிதி ஆயோக் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஆலோசனை அமைப்பான நிதி ஆயோக் அமைப்பு ஆண்டுதோறும் மருத்துவம், சுகாதாரம் தொடர்பான ஆய்வறிக்கையை வெளியிட்டுவருகிறது. உலக வங்கியின் ஒத்துழைப்புடனும், மத்திய சுகாதாரத் துறை அமைச்சின் உதவியுடனும் இந்த ஆய்வு நடத்தப்பட்டு தரவுகள் வெளியிடப்படுகின்றன.
நோயிலிருந்து தற்காத்துக்கொள்ள விழிப்புணர்வு உண்டாக்குதல், நோய்கள் பரவாமல் தடுத்தல் உள்ளிட்ட 23 அம்சங்களின் அடிப்படையில் அனைத்து மாநிலங்களிலும் ஆய்வு செய்யப்பட்டு அறிக்கை தயாரிக்கப்படுகிறது.அந்தவகையில் நேற்றையதினம் வெளியிடப்பட்ட 2017-18ஆம் ஆண்டுக்கான சுகாதாரம் குறித்த ஆய்வறிக்கையில இந்தியாவில் சிறப்பான சுகாதார வசதிகளைக் கொண்ட முதன்மையான மாநிலமாகக் கேரளம் உள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது
அதேவேளை கடந்த ஆண்டு மூன்றாவது இடத்திலிருந்த தமிழ்நாடு தற்போது ஆறு இடங்கள் பின்னோக்கி ஒன்பதாவது இடத்தைப் பிடித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.ஆந்திரப் பிரதேசம் இரண்டாவது இடத்தையும், மகாராஷ்டிரம் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ள அதேநேரம் உத்தரப் பிரதேசம் மிகவும் பின்தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது
கடந்த ஆண்டில் பரவிய டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு எடுத்த நடவடிக்கை, சாத்தூரில் எச்ஐவி தொற்று பரவிய நோயாளியின் ரத்தத்தைக் கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஏற்றியது ஆகியவை கடுமையான விவாதத்தையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியிருந்த நிலையில் தமிழகம் இந்தப் பின்னடைவை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #சுகாதாரத்தில் #தமிழகம் #பின்னடைவை #நிதி ஆயோக்