இலங்கை பிரதான செய்திகள்

இளம் குடும்பத்தலைவர் கொலை – விசாரணைகளை விளக்கத்துக்கு எடுக்க தவணையிடப்பட்டதுட்டது.

வட்டுக்கோட்டை பிக்னல் மைதானத்தில் இளம் குடும்பத்தலைவர் ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் 6 பேருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை மீதான  விசாரணைகளை  செப்ரெம்பர் 5ஆம் திகதி தொடக்கம் நாளாந்த விளக்கத்துக்கு எடுக்க யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை தவணையிட்டது.
அத்துடன், சந்தேகநபர்கள் தரப்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்ற நீதிமன்று வழக்கின் அத்தனை சாட்சிகளையும் மன்றில் மீளவும் முற்றபட உத்தரவிடப்பட்டது.
வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கும், யாழ்ப்பாணம் சென்.பற்றிக்ஸ் கல்லூரிக்கும் இடையில் நடந்த ராஜன் கதிர்காமர் வெற்றிக்கிண்ணத்துக்கான 50 ஓவர்கள் துடுப்பாட்ட போட்டி 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15ஆம் திகதி வட்டுக்கோட்டை பிக்னல் மைதானத்தில் இடம்பெற்றது.
இந்தப் போட்டில் இருதரப்பினருக்கு இடையே முறுகல் ஏற்பட்டு அது கைகலப்பாக மாறியது. கைகலப்பில் யாழ்ப்பாணம் பிரதான வீதியைச் சேர்ந்தவரும் சென்.பற்றிக்ஸ் கல்லூரியின் பழைய மாணவனுமான ஜெயரட்ணம் டினோசன் அமலன் (வயது 24) என்னும் ஒரு பிள்ளையின் தந்தை உயிரிழந்தார்.
சம்பவத்தையடுத்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் 9 பேர் வரை சரண்டைந்தனர்.  மல்லாகம் நீதிமன்றில் சுருக்கமுறையற்ற விசாரணை இடம்பெற்றது. அதனையடுத்து 6 பேருக்கு எதிராக கொலைக் குற்றச்சாட்டின் கீழான குற்றப்பத்திரிகை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் சட்ட மா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கின் சாட்சியப் பதிவுகள் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றின் அப்போதைய நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டன.எனினும் முதலாம் மற்றும் இரண்டாம் எதிரிகளின் சட்டத்தரணிகளால் இந்த வழக்கை இடைநிறுத்துவதற்கான மனு மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது. மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் வழக்கு விசாரணை நடத்த ஆட்சேபனை தெரிவித்தே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனு மீதான ஆரம்ப விசாரணையில் மனுதாரர்களின் சட்டத்தரணிகள் முன் வைத்த சமர்ப்பணத்தை முகதளவில் ஏற்றுக்கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றம், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் இந்த வழக்கை விசாரிக்க இடைக்காலத் தடை உத்தரவை 2017ஆம் ஆண்டு ஓகஸ்ட் 6ஆம் திகதி வழங்கியது.

எனினும் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் யாழ்ப்பாணத்திலிருந்து மாற்றலாகி திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்றதால் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்த மனுவை 2018ஆம் ஆண்டு செப்ரம்பர் மாதம் மனுதாரர்கள் மீளப்பெற்றுக்கொண்டனர்.  இந்த நிலையில் இந்தக் கொலை வழக்கை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில்  சட்ட மா அதிபர் திணைக்களம்  மீளத் திறந்தது.
அதனடிப்படையில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்குத் தொடுனர் சார்பில் அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரன் மன்றில் முன்னிலையானார்.
 முதலாவது எதிரிக்காக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், இரண்டாவது எதிரிக்காக கேசவன் சயந்தன் மற்றும் ஏனைய எதிரிகளுக்காக சட்டத்தரணிகள் வி.திருக்குமரன், கே.சுகாஷ் ஆகியோர் முன்னிலையானார்கள்.
“குற்றவியல் வழக்கை விசாரணை செய்த நீதிபதி மாற்றலாகிச் செல்லும் போது, வழக்கின் சாட்சிகளை மீளப் பதிவு செய்யக் கோரும் சட்ட ஏற்பாடு எதிரி தரப்புக்கு உள்ளது. அதனடிப்படையில் இந்த வழக்கிலும் அனைத்து சாட்சிகளையும் அழைத்து மீள விளக்கம் நடத்த அனுமதிக்கவேண்டும்” என்று எதிரிகள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் மன்றுரைத்தனர்.
அதனை ஆராய்ந்த மன்று, வழக்கின் அத்தனை சாட்சிகளையும் மன்றில் முற்படுவதற்கான அழைப்புக்களையைச் சேர்ப்பிக்க பதிவாளருக்கு உத்தரவிட்டது. அத்துடன், வழக்கை நாளாந்த விளக்கத்துக்காக செப்ரெம்பர் 5,6,9 மற்றும் 10ஆம் திகதிகளில் நியமித்து மேல் நீதிமன்றம் தவணையிட்டது.   #வட்டுக்கோட்டை #குடும்பத்தலைவர்   #கொலை #குற்றப்பத்திரிகை  #தவணை

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.