மேற்கு ஐரோப்பாவில் வெப்ப அலைகள் தொடர்ந்து தாக்கி வரும் நிலையில் முதல்முறையாக பிரான்ஸில் மிக அதிக அளவு வெப்பநிலை பதிவாகி உள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு, மிக அதிகபட்சமாக நேற்றையதினம் பிரான்ஸில் 45.8 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது. 16 ஆண்டுகளுக்கு முன்பாக கடந்த 2003ஆம் ஆண்டில், அங்கு பதிவான 44.1 டிகிரி செல்ஸியஸே இதுவரை அதிக வெப்பநிலை பதிவாக இருந்து வந்தது.
இந்தநிலையில் அதிக அளவு வெப்ப அலையால் அனைவரும் ஆபத்தில் உள்ளோம் என பிரான்ஸின் சுகாதார அமைச்சரான ஆக்னஸ் பூஷின் இது குறித்து தெரிவித்துள்ளார்.
வடக்கு ஆப்ரிக்காவில் இருந்து வரும் அனல் காற்றே இந்த நிலைமைக்கு காரணம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை கடும் வெப்ப தாக்குதலால் ஸ்பெயினில் வயல்வெளிகளில் பணிபுரிந்து கொண்டிருந்த 17 வயது இளைஞர் உள்பட இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலத்தை நோக்கும்போது, வெப்ப அலைகளின் தாக்கம் இயற்கையாக ஏற்படும் ஒன்றாக இருந்தாலும், பருவநிலை மாற்றத்தின் காரணமாக இதுபோன்ற நிகழ்வுகள் அடிக்கடி நிகழக்கூடும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். #ஐரோப்பா #பிரான்ஸில் #வெப்பம்