கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் கீழான சிறு போக நெற்செய்கைக்கான நீர் விநியோகம் உரிய முறையில் வழங்கப்படாத நிலையில் குறிப்பிட்ட சில பகுதிகளில் நெற்செய்கை அழிவடைந்து காணப்படுவதுடன் இது தொடர்பான தகவல்களை சம்பத்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லும் விவசாயிகள் திட்டமிட்டு பழிவாங்கப்படும் சம்பவங்கள் இடம் பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குளத்திலிருந்து நீர் உரிய முறைகளில் வழங்கப்படுகின்ற போதும் முரசு மோட்டை மருதங்குளம் உடுப்பாற்றுக் கண்டல் சேற்றுக்கண்டி பொக்கன் குளம் போன்ற பகுதிகளிலுள்ள விவசாயிகளுக்கான நீரைஉரிய முறையில் கமக்கார அமைப்பினர் வழங்காத நிலையில் குறிப்பிட்ட சில விவசாயிகள் தமது பயிர்ச் செய்கைகளை கைவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுவரை உரிய நீர் விநியோகமின்றி சேற்றுக்கண்டி பகுதியில் ஏழை விவசாயியின் இரண்டு ஏக்கர் நெற் செய்கை கைவிடப் பட்டுள்ளது.
இது தொடர்பாக இரனைமடு விவசாய சம்மேளத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை சம்மேளத்தின் தலைவர் நீர்ப்பாசனத்தினைக்கள உத்தியோகத்தர்கள் நிலமைகளை நேரடியாக சென்று பார்வையிட்டனர்.
மேற்படி நீர் விநியோக முறைகேடுகள் மற்றும் வாய்க்கால்களை புனரமைப்பதற்காக நிதி சேகரிக்கப்பட்டும் உரிய முறையில் வாய்க்கால்கள் புனரமைக்கப்படாமை குறித்த தகவல்களையும் உரிய ஆதாரங்களுடன் செய்தியாக வெளிக் கொணர்ந்தமை தொடர்பில் குறித்த விவசாய அமைப்பின் தலைவர் மற்றும் பொருளாளர், உறுப்பினர்கள் சிலரால் அச்சுறுத்தல் விடுக்கபட்டதாக குறிப்பிடப்படுகிறது.
கடந்ந 22ம் திகதிமுதல் நெற் செய்கைக்கான நீர் தடுக்கப்பட்டுள்ளமை மற்றும் கடந்த 30-06-2019 8-30 மணியளவில் காணிக்குள் அத்துமீறி நுழைந்து அச்சுறுத்தியமை தொடர்பில், அவர்களுக்கெதிராக நேற்று முன்தினம் இரவு (30-06-2019) 9.40 மணியளவில் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் கிளிநொச்சிப் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். #கிளிநொச்சி #இரணைமடுக்குளம் #சிறுபோகநெற்செய்கை #முரசுமோட்டை #மருதங்குளம் #உடுப்பாற்றுக்கண்டல் #சேற்றுக்கண்டி #பொக்கன்குளம்