போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் இறுதிநாள் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று திங்கட்கிழமை கொழும்பில் இடம்பெறவுள்ளது. போதைப்பொருளுக்கு எதிரான சர்வதேச தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் வழிகாட்டலில் பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொது மக்களை இலக்காகக்கொண்டு நாடளாவிய ரீதியில் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
போதைப்பொருள் ஒழிப்பு ஜனாதிபதி விசேட செயலணி, தேசிய அபாயகர ஒளடத கட்டுப்பாட்டு சபை மற்றும் இலங்கை காவல்துறை இணைந்து போதைப்பொருள் பாவனை பரவலடைவது குறித்து தேசிய ரீதியான ஆய்வறிக்கையொன்றை தயாரித்துள்ளதுடன், குறித்த அறிக்கை இன்று இடம்பெறவுள்ள மாநாட்டில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது.
இதேவேளை, ஜனாதிபதியின் நேரடி தலையீட்டில் நடைமுறைப்படுத்தப்படும் போதைப்பொருள் ஒழிப்பு தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் 2015ஆம் ஆண்டு முதல் 2019 வரையான காலப்பகுதியில் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றங்களுக்காக கைது செய்தல் மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சையளித்தல், புனர்வாழ்வளித்தல் உள்ளிட்ட பல்வேறு வெற்றிகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #போதைப் பொருள்ஒழிப்பு #மைத்திரிபாலசிறிசேன