முல்லைத்தீவு செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக பௌத்த மதகுருவினால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு மீதான விசாரணைகள் இன்று வவுனியா மேல் நீதிமன்றத்தில் இடம்பெறவுள்ளன.
ஆலய வளாகத்தை சுவீகரித்து அங்கு பௌத்த விகாரை அமைத்து குடிகொண்டுள்ள பௌத்த துறவியான கொலம்ப மேதாலங்க தேரர் பாரிய புத்தர் சிலை ஒன்றை நிறுவி பிரதேச மக்களுடன் முரண்பாடுகளை தோற்றுவித்திருந்தார்.
இதனையடுத்து குறித்த இடத்தில் அமைதிக்கு பங்கம் ஏற்பட்டதாக தெரிவித்து முல்லைத்தீவு காவற்துறையினரால் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. கடந்த மாதம் ஆறாம் திகதி இடம்பெற்ற விசாரணைகளின்போது, அனைத்து விடயங்களையும் ஆராய்ந்த நீதவான், இரண்டு தரப்பினரும் எந்தவித மத வழிபாடுகளுக்கும் இடையூறு இல்லாமல் வழிபாடுகளை மேற்கொள்ளுமாறும் அதை மீறுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உத்தரவிட்டார்.
இந்த நிலையில் இந்த தீர்ப்புக்கு எதிராக பௌத்த மதகுரு சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணிகள் உள்ளிட்டோரால் வவுனியா மேல் நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. #முல்லைத்தீவு #செம்மலை #நீராவியடிப் பிள்ளையார்