ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட வழக்கில் முன்னாள் இராணுவப் புலனாய்வு அதிகாரி லலித் ராஜபக்ஸவையும் சந்தேக நபராக இணைத்துக்கொள்ளுமாறு குற்றப்புலனாய்வு விசாரணை பிரிவுக்கு சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.
ஊடகவியலாளர் உபாலி தென்னக்கோன் தாக்கப்பட்ட வழக்கை விசாரித்து வந்த குற்றப்புலனாய்வு விசாரணைப் பிரிவினர், உபாலி தென்னக்கோனின் வாகனத்தில் கோப்ரல் லலித் ராஜபக்ஸவின் கைரேகைகள் பதிந்திருந்த நிலையில், அவரை கடந்த 7ஆம் திகதி இரவு கைது செய்து விளக்கமறியலில் வைத்துள்ளனர்.
இந்த நிலையில், ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட வழக்கிலும் லலித் ராஜபக்ஸ தொடர்புபட்டுள்ளமை கண்டறியப்பட்டு உள்ளதாகவும் அவரை கைது செய்து நீதிமன்றில் நிறுத்துமாறும் இந்த வழக்கில் சந்தேகநபராக அவரது பெயரையும் இணைக்குமாறும் சட்டமா அதிபர் குற்றப்புலனாய்வு விசாரணைப் பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளார்.
குறிப்பாக லலித் ராஜபக்ஷ இந்தச் சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளமைக்கு போதிய சான்றுகள் இருப்பதாகவும், அதனால் குற்றவியல் சட்டக்கோவையின் கீழ், கீத் நொயாரை கடத்தியது, தாக்கியது, கொலை செய்ய முயன்றது ஆகிய குற்றச்சாட்டுகள், லலித் ராஜபக்ஸவுக்கு எதிராக சுமத்தப்படவுள்ளதாகவும் சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார். #ஊடகவியலாளர்கீத்நொயார்