குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைக்கு மரண தண்டனை வழங்குவது உள்ளிட்ட போக்சோ சட்ட திருத்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்ற போது அங்கு பல்வேறு சட்டமசோதா மற்றும் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அந்தவகையில் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் போக்சோ சட்டத்தில் பல்வேறு திருத்தங்களை செய்வதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் போக்சோ சட்டத்தின் 4, 5 மற்றும் 6-வது பிரிவுகளில் திருத்தம் செய்ய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதேபோல், குழந்தைகளை ஆபாச படங்களில் பயன்படுத்தினால் அபராதம் மற்றும் சிறை தண்டனை வழங்கும் வகையில் இந்த சட்டத்தின் 14 மற்றும் 15-வது பிரிவுகளில் திருத்தம் செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டது.
கடுமையான தண்டனை வழங்குவது குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களை தடுத்து நிறுத்தும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், குழந்தைகளின் கண்ணியத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்ய இதுபோன்ற கடுமையான தண்டனை அவசியமாகிறது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. #குழந்தைகள் #பாலியல் வன்முறை #மரண தண்டனை #அமைச்சரவை #ஒப்புதல்