மலையகம், வடக்கு மற்றும் மேல் மாகாணம் அடங்களாக புதிய தேசிய கூட்டணி ஒன்று கொட்டகலையில் 11.07.2019 அன்று அங்குராப்பணம் செய்து வைக்கப்பட்டது. இதன்போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் இந்த கூட்டணி அமைப்பதற்கான ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டது.
கொட்டகலை தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் இடம்பெற்ற இந்த வைபவத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான், ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவர் பிரபா கணேசன், ஜனநாயக போராளிகள் கட்சியின் பொது செயலாளர் இ.கதிர் ஆகியோர் தலைமையிலான குழுக்கள் இதன்போது கலந்து கொண்டன.
இலங்கையில் தமிழ் பேசும் மக்களை தவிர்ந்த ஏனைய சமூகத்தினருக்கு கிடைக்கும் அனைத்து வரப்பிரசாதங்களும் தமிழ் மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த தேசிய கூட்டணி அங்குராப்பணம் செய்யப்பட்டது.
இதன்போது இந்த தேசிய கூட்டணியில் அங்கம் வகிக்க கூடிய இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் காங்கிரஸ், ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியவற்றின் பொது செயலாளர்கள் இணைந்து உடனபடிக்கையில் கைச்சாத்திட்டனர்.
அந்தவகையில் இ.தொ.கா சார்பாக பொது செயலாளர் அனுஷா சிவராஜா, ஜனநாயக போராளிகள் கட்சியின் பொது செயலாளர் இ.கதிர், ஜனநாயக மக்கள் காங்கிரஸின் பொது செயலாளர் சுரேஷ் கங்காதரன் ஆகியோர் உடன்படிக்கையில் கையொப்பமிட்டனர்.
இப் புதிய கூட்டணியை ஆரம்பிப்பதற்கு முன்பாக 11.07.2019 அன்று காலை றம்பொடையில் உள்ள ஆஞ்சிநேயர் ஆலயத்தில் ஆசி வேண்டிய சமய வழிபாடுகளும் இடம்பெற்றது. இதில் பெருந்திரளான மக்களோடு கூட்டணியில் இணைந்துள்ள உறுப்பினர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடதக்கது.#ஆறுமுகன் தொண்டமான் #தலைமை #புதிய தேசிய கூட்டணி #ஒப்பந்தமும்
(க.கிஷாந்தன்)