மழைக் காலங்களில் வீணாகக் கடலில் கலக்கும் மழைநீரைச் சேமிக்க காவிரியின் குறுக்கே மூன்று தடுப்பணைகள் கட்டப்படும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் நடைபெற்ற சட்டமன்றத்தில் பொதுப்பணித் துறை மானியக் கோரிக்கை விவாதத்தில் பேசிய திமுக உறுப்பினர் கே.என்.நேரு, கொள்ளிடத்தில் உபரிநீரைச் சேமிக்க போதுமான நடவடிக்கை எடுக்காததால் மழைக் காலங்களில் வீணாக உபரிநீர் கடலில் கலப்பதாகத் தெரிவித்திருந்தார்.
இதற்குப் பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கொள்ளிடத்தில் தடுப்பணை கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. கரூர் நாமக்கல் இடையே உள்ள காவிரி பகுதியில் தடுப்பணைகள் கட்டப்படும். அதுபோன்று காவிரியின் குறுக்கே மூன்று இடங்களில் தடுப்பணைகள் கட்டும் பணிகளுக்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், மழைக் காலங்களில் மழைநீர் வீணாகும் இடங்களில் தடுப்பணைகள், கதவணைகள் கட்டப்படும் எனத் தெரிவித்த அவர், மேலும் பல இடங்களில் 105.90 கோடி ரூபாய் செலவில் 12 தடுப்பணைகள் கட்டப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
நீர்நிலை பாதுகாக்கத் தமிழக அரசு தவறிவிட்டதாகத் தெரிவித்து 100 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது குறித்து சட்ட வல்லுநர்களிடம் ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். #காவிரி #தடுப்பணைகள் #எடப்பாடி பழனிசாமி