கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கன்னியா மீதான ஆக்கிரமிப்பை தடுக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படவிருந்த போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
கன்னியா தமிழர் மரபுரிமை பாதுகாப்பு அமைப்பு ஏற்பாடு செய்த இந்த போராட்டத்திற்கு எதிராக, காவல்துறையினர் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இன முறுகலை ஏற்படுத்தும் போராட்டம் என்று கூறியே காவல்துறையினர் வழக்கினை தாக்கல் செய்துள்ளனர். தமிழர்களின் மரபு உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி இடம்பெற இருந்த இந்த போராட்டத்திற்கு வடக்கு கிழக்கிலிருந்து பெருந்திரளானோர் சென்றிருந்தனர். போராட்டத்திற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் கடுமையான சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
காவல்துறையினர் இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். சில இடங்களில் போராட்டத்துக்கு செல்லும் மக்களை காவல்துறையினர் வீதி தடுப்புகளை ஏற்படுத்தி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.