காவிரி மேலாண்மை ஆணையக உத்தரவின்படி, காவிரியில் இருந்து தமிழகத்துக்கு விநாடிக்கு 855 கனஅடி நீரினை கர்நாடகா அரசு திறந்துவிட்டுள்ளது. கடந்த ஜூன் மாத இறுதியில் நடந்த காவிரி மேலாண்மை ஆணையக கூட்டத்தில் உச்ச நீதிமன்ற இறுதி உத்தரவின்படி ஜூன், ஜூலை மாதங்களில் தமிழகத்து வழங்க வேண்டிய 40.43 டிஎம்சி நீரை கர்நாடகா அரசு திறந்துவிட வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.
அத்துடன் கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை பொழிவின் அளவை பொறுத்து தமிழகத்துக்கு நீரை திறந்து விடலாம் எனவும் உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, கர்நாடக அரசு கடந்த இரு வாரங்களாக காவிரியில் விநாடிக்கு சுமார் 300 கனஅடி முதல் 500 கனஅடி வரை தமிழகத்துக்கு நீரை திறந்துவிட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக காந்நாடகாவின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருவதனால் அணைகளுக்கான நீர்வரவு அதிகரித்துள்ள நிலையில் அம்மாநில முதல்வர் குமாரசாமி தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிடுமாறு நீர்ப் பாசனத்துறை அதிகாரிகளுக்கு உத்தர விட்டிருந்தார்.
இதன்பேரில், நேற்று முன்தினம் இரவு, தமிழகத்துக்கு கபினி அணையில் இருந்து விநாடிக்கு 500 கனஅடி நீரும் கிருஷ்ண ராஜசாகர் அணையில் இருந்து விநாடிக்கு 350 கனஅடி நீரும் திறக்கப்பட்டது. இந்த நீர், இன்னும் இரு தினங்களில் இது மேட்டூர் அணையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. #தமிழகத்துக்கு #விநாடி #கர்நாடகா