மலையகத்தில் காலநிலை சீர்கேட்டின் காரணமாக பெய்து வரும் அடை மழையினால் மேல் கொத்மலை நீர்தேக்க பகுதியின் நீர்மட்டம் உயர்வடைந்ததால் (இன்று) 18.07.2019 மதியம் முதல் 5 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளது. அணைக்கட்டிற்கு கீழ் பகுதியில் ஆற்றை பயன்படுத்துபவர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். அத்தோடு மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறந்து விடப்பட்டதன் காரணமாக சென் கிளயார் நீர்வீழ்ச்சியின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளமையும் குறிப்பிட்டதக்கது.
இதேவேளை மலையகத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையினை தொடர்ந்து கொட்டகலை மேபீல்ட் சாமஸ் பகுதியில் தொடர்குடியிருப்பு ஒன்றில் உள்ள 6 வீடுகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளதுடன் அப்பகுதியில் உள்ள பாடசாலை, கொழுந்து மடுவம் ஆகியனவற்றிக்கும் வெள்ள நீர் புகுந்துள்ளது.
அத்துடன் கொட்டகலை ஆறு பெருக்கெடுத்தன் காரணமாக லொக்கீல் பகுதியில் உள்ள 30 வீடுகளுக்குள்ளும் கொட்டகலை வூட்டன் பகுதியில் 10 கடைகளுக்கும் வெள்ள நீர் புகுந்துள்ளன. வட்டவளை பகுதியில் வெள்ளம் ஏற்பட்டதன் காரணமாக பல குடும்பங்கள் வட்டவளை தமிழ் வித்தியாலயத்தில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. #கொத்மலை #வான்கதவுகள் #திறப்பு#வீடுகளில்
(க.கிஷாந்தன்)