கொடிகாமத்தைச் சேர்ந்த 23 வயது இளைஞரே காவற்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு இன்று அதிகாலை 3 மணிக்கு சென்ற இளைஞனின் உறவினர், இறந்தவர் கொடிகாமம் கச்சாயைச் சேர்ந்த 23 வயதுடைய செல்வரத்தினம் கவிகஜன் என அடையாளம் காட்டியுள்ளார்.
இதேவேளை தென்மராட்சியிலிருந்து 3 மோட்டார் சைக்கிள்களில் 6 இளைஞர்கள் நேற்றிரவு புறப்பட்டனர் எனவும், சம்பவத்தில் தப்பித்த அனைவரும் தென்மராட்சியைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். உயிரிழந்த இளைஞனின் தந்தை புற்றுநோயால் உயிரிழந்த நிலையில் ஒரே மகனான இவர் தாயாருடனே வாழ்ந்து வந்தார் என்றும் காவற்துறையினர் தெரிவித்தனர்.
மானிப்பாய் – இணுவில் வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தவர் மீது காவற்துறையினர் நடத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயமடைந்தார்.
இந்தச் சம்பவம் நேற்றிரவு 8.40 மணியளவில் இடம்பெற்றது. இறந்தவர் ஆவா குழுவைச் சேர்ந்தவர் என தெரிவிக்கும் காவற்துறையினர் சம்பவ இடத்திலிருந்து 2 வாள்களையும் மீட்டிருந்தனர். அத்துடன், உயிரிழந்தவர் பயணித்த மோட்டார் சைக்கிளின் இலக்கத் தகடு போலியானது என்றும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி