172
யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஸ்மார்ட் லாம்ப் போல் (Smart Lamp Pule) கோபுரங்கள் அமைப்பதற்கு தடை விதிக்கக் கோரி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் நீதிப்பேராணை மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் நவாந்துறை வடக்கைச் சேர்ந்த செல்லப்பர் பத்மநாதன் என்ற 34 வயதுடையவர் மனுதாரராகக் குறிப்பிடப்பட்டுள்ளார். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் சார்பில் சட்டத்தரணி ரிஷிகேசனி சத்தியநாதன் இந்த மனுவைத் தாக்கல் செய்தார்.
யாழ்ப்பாணம் மாநகர சபை முதலாவது பிரதிவாதியாகவும் யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் இரண்டாவது மனுதாரராகவும் யாழ்ப்பாணம் மாநகர ஆணையாளர் மூன்றாவது மனுதாரராகவும் Edotco Services Lanka (pvt)LTD நான்காவது மனுதாரராகவும் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
மனுவில் ஸமார்ட் லாம் கம்பங்களை நடுவதற்கு முன்னர் 6 உறுப்பினர்களைக் கொண்ட குழுவை நியமித்து அவற்றை நடுவதற்கு ஆராய்ந்து அறிக்கை இடுவதன் அடிப்படையில் தொடர் நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம் என்று சபையில் தீர்மானிக்கப்பட்டது. எனினும் அத்தகைய எந்தவொரு குழுவையும் நியமிக்காது மாநகர முதல்வர், தொலைத்தொடர்பு நிறுவனத்துடன் கம்பங்களை நடுவதற்கு உடன்படிக்கை ஒன்றைச் செய்துள்ளார்.
அத்துடன், நகர அபிவிருத்தி அதிகார சபையின் 11.08.2008ஆம் திகதிய 21ஆம் இலக்க சுற்றறிக்கையின் பிரகாரம் தொலைத்தொடர்பு கோபுரங்களை அமைப்பது தொடர்பில் உள்ளூராட்சி மன்றங்கள் திட்டமிடல் குழு ஒன்றை நியமிக்கவேண்டும். அந்தத் திட்டமிடல் குழு தீர்மானங்களை எடுக்கவேண்டும். அந்தச் சுற்றறிக்கையை மீறி ஸ்மார்ட் லாம்ப் போல் கம்பங்கள் நடுவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
எனவே யாழ்ப்பாணம் மாநகர முதல்வரும் Edotco Services Lanka (pvt)LTD நிறுவனமும் 2019.05.15ஆம் திகதி செய்துகொண்ட சட்டவரம்பை மீறிய உடன்படிக்கையை ரத்துச் செய்யும் உறுதிகேள் நீதிப்பேராணை கட்டளை.
Edotco Services Lanka (pvt)LTD நிறுவனத்தால் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுவரும் சட்டவிரோத கோபுரங்களை தொடர்ந்தும் அமைக்கக் கூடாது தடைவிதிக்கும் தலையீட்டு நீதிப் பேராணை கட்டளை.
Edotco Services Lanka (pvt)LTD நிறுவனத்தால் அமைக்கப்படும் கோபுரங்களில் 5ஜி தொழிநுட்பத்தைப் பொருத்த Edotco Services Lanka (pvt)LTD நிறுவனம் அனுமதி வழங்க்கக் கூடாது என்ற தலையீட்டு நீதிப் பேராணைக் கட்டளை.
Edotco Services Lanka (pvt)LTD நிறுவனம் இதுவரை அமைத்த கோபுரங்களை அகற்ற யாழ்ப்பாணம் மாநகர சபை, மாநகர முதல்வர் மற்றும் மாநகர ஆணையாளர் ஆகியோருக்கு உத்தரவிடும் ஆணையீட்டு நீதிப்பேராணைக் கட்டளை.
மாநகர முதல்வருக்கும் Edotco Services Lanka (pvt)LTD நிறுவனத்துக்கும் இடையிலான உடன்படிக்கையை இடைநிறுத்தி வைப்பதற்கான இடைக்காலக் கட்டளை. Edotco Services Lanka (pvt)LTD நிறுவனத்தால் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுவரும் சட்டவிரோத கோபுரங்களை தொடர்ந்தும் அமைப்பதை இடைநிறுத்த இடைக்காலக் கட்டளை.
Edotco Services Lanka (pvt)LTD நிறுவனத்தால் அமைக்கப்படும் கோபுரங்களில் 5ஜி தொழிநுட்பத்தைப் பொருத்த Edotco Services Lanka (pvt)LTD நிறுவனம் அனுமதி வழங்குவதை இடைநிறுத்தும் இடைக்காலக் கட்டளை
ஆகிய நிவாரணங்களை மனுதார்ர் மனுவில் கோரியுள்ளார். #மனு #யாழ் மாநகரசபை #முதல்வர்
Spread the love