தேசிய புலனாய்வுத் துறையின் தலைவர், சிரேஷ்ட காவற்துறைமா அதிபர் நிலந்த ஜெயவர்தன 4 மணி நேர சாட்சியம் வழங்கியுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்யும் பாராளுமன்றத் தெரிவுக் குழு முன்னிலையில், நேற்று (24.09.19) இரவு தனி இடம் ஒன்றில் தனது வாக்கு மூலத்தை வழங்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்கான பாராளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணைகள் நேற்றும் இடம்பெற்றன. தெரிவுக்குழு முன்னிலையில் பல உயர் அதிகாரிகள் சாட்சியம் வழங்கினர்.
இந்நிலையில் நேற்று சாட்சி வழங்கிய சிலரது விசாரணைகளை ஊடகங்களுக்கு வழங்கப்படாமல் இருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்கான பாராளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணைகள் மீண்டும் இன்று காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ளது. இன்றை தினம் விஷேட அதிரடிப்படையினரின் கட்டளை அதிகாரி சிரேஷ்ட பிரதி காவற்துறை மா அதிபர் எம்.ஆர் லதீப் இன்று சாட்சி வழங்கவுள்ளார். இதற்கு மேலதிகமாக முன்னாள் காவற்துறை மா அதிபர் என்.கே இலங்ககோன் மற்றும் முன்னாள் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் செயலாளர் பத்மசிறி ஜயமான்ன ஆகியோரும் இன்று சாட்சி வழங்க உள்ளனர்.