இந்திய வம்சாவளி மலையக சமூகத்தின் முதல் பேராசிரியர் என்ற பெருமைக்குரிய பொருளியல் பேராசிரியர் மு.சின்னத்தம்பி தனது 79 ஆவது வயதில் நேற்று கொழும்பில் காலமானார்.
கண்டி மாவட்டம் ரங்கல எனும் பிரதேசத்தில் முத்துசாமி –முத்துவடிவு தம்பதிகளுக்கு பிறந்த இவர், அங்குள்ள தோட்டப் பாடசாலையில் ஆரம்பக் கல்வியைத் தொடர்ந்தார். இவரது தந்தை தோட்ட வெளிக்கள உத்தியோகத்தராவார். 1948 ஆம் ஆண்டு இவரது குடும்பம் தலவாக்கலை கல்கந்த எனும் பிரதேசத்துக்கு இடம்பெயர்ந்தது. பின்னர் தலவாக்கலை அரச சிரேஷ்ட பாடசாலையில் சாதாரண தரம் வரை பயின்றார். பின்னர் 1959 இல் தெல்லிப்பளை மகஜனா கல்லூரியில் உயர்தரம் பயின்று 1961 இல் பேராதனை பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகி பொருளியலை விசேட பாடமாக தொடர்ந்தார். 1965 இல் உதவி விரிவுரையாளராகும் சந்தர்ப்பம் கிடைத்தது.
இரண்டு வருடங்களில் நிரந்தர விரிவுரையாளராகி பின்பு 1969 இல் இங்கிலாந்தின் மன்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் பொருளியல் முதுமாணி பட்டத்தைப் பெற்றார். 1974 இல் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளராகி கடமையாற்றி வந்த இவர், 1993 ஆம் ஆண்டு பொருளியல்துறை பேராசிரியராகவும் 1997 இல் துறைத்தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டு 2006 இல் ஓய்வு பெற்றார். தோட்ட வீடமைப்பு உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் கீழ் 2006 ஆம் ஆண்டு பத்தாண்டு திட்ட உருவாக்கத்தில் தொழில் கல்வி சம்பந்தமான குழுவிற்கு தலைமை தாங்கி பல்வேறு காத்திரமான பங்களிப்பை செய்தார். தேயிலையின் செழுமையும் தொழிலாளர்களின் ஏழ்மையும் என்ற ஆய்வு நூலிற்காக 2015 ஆம் ஆண்டு இவருக்கு சாகித்ய விருது கிடைத்தது.
தோட்டத்தொழிலாளர்களின் மாதச்சம்பளம் குறைந்த பட்சம் ஆயிரம் ரூபாவாக இருக்க வேண்டியதன் அவசியம் ஏன் என்பதை புள்ளி விபரங்களோடு ஆய்வு செய்து வெளியிட்ட இவர், மலையக பல்கலைக் கழகம் பற்றிய செயற்பாடுகளில் காத்திரமான கருத்துக்களை முன்வைத்தார். அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக கொழும்பு ஜயரத்ன மலர்ச்சாலையில் வைக்கப்பட்டு, இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் பொரளை கனத்தை மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும். #மலையகத்தின் #முதல் #பேராசிரியரான #மு.சின்னத்தம்பி