இங்கு கருத்து தெரிவித்த ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது;
சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி மன்றம் வழங்குவதற்கு நாங்கள் உத்தரவாதம் வழங்கியுள்ள நிலையில், கல்முனை எல்லைப் பிரச்சினையினால் தொடர்ந்து இழுபறி நடந்துகொண்டு வருகிறது. இந்த இழுபறி நிலையை இன்னும் நீடிப்பதற்கு அனுமதிக்க முடியாது. இருதரப்பும் சேதாரமில்லாத விட்டுக்கொடுப்புகளை செய்து இன்னும் ஓரிரு நாட்களுக்குள் இதற்கு தீர்வு காணவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
சாய்ந்தமருது விடயத்தில் முஸ்லிம் காங்கிரஸ் இனியும் பழியை சுமக்க முடியாது. இதனை இன்னும் இழுத்தடித்துக்கொண்டிருக்க முடியாது. அதேநேரம் கல்முனைக்கும் அநீதி இழைக்கப்படாமல் தீர்வுகள் எட்டப்பட வேண்டும். இவையிரண்டையும் ஒரே நேரத்தில் செய்ய வேண்டுமென்றால் தமிழ் தரப்பும் முஸ்லிம் தரப்பும் ஓர் இணக்கப்பாட்டுக்கு வந்தே ஆகவேண்டும். தமிழ் மக்களுடன் பரஸ்பரத்தைக் காட்டுவதற்கு இதுவொரு நல்ல சந்தர்ப்பம்.
இந்தப் பிரச்சினையை தீர்ப்பதில் அமைச்சர் வஜிர அபேவர்தன மும்முரமாக செயற்பட்டுக் கொண்டிருக்கிறார். கல்முனை எல்லைப் பிரச்சினை முடிவுக்கு வந்தால், மறுநாளே சபைகளை பிரகடனப்படுத்துவதாக அவர் கூறியிருக்கின்றார். தேர்தலுக்கு முன்னர் இதை சாதித்துக்கொள்வதில்தான் வெற்றி இருக்கின்றது. அடுத்த கட்டமாக கல்முனை மற்றும் மருதமுனை பிரதிநிதிகளுடன் பேசுவதற்கு தீர்மானித்துள்ளோம் என்றார்.
இக்கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம். ஹரீஸ், அலிஸாஹிர் மௌலானா, ஏ.எல்.எம். நசீர், மு.கா. தவிசாளர் அப்துல் மஜீத், செயலாளர் நிஸாம் காரியப்பர், கல்முனை மேயர் ரகீப், மாநகர சபை உறுப்பினர்கள், சாய்ந்தமருது சுயேற்சைக் குழு உறுப்பினர்கள், சாய்ந்தமருது பள்ளிவாசல் தலைவர் வை.எம். ஹனீபா, கட்சியின் உள்ளூர் பிரதிநிதிகள் மற்றும் கல்முனை, சாய்ந்தமருது, மருதமுனை, நற்பிட்டிமுனை ஊர்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். #கல்முனை #தீர்வு #முஸ்லிம் #தமிழ் #ரவூப் ஹக்கீம்