சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் சட்டத்தரணிகளை அச்சுறுத்தும் முகமாக ஒளிப்படம் எடுத்தமை தொடர்பில் நீதிவானின் கவனத்திற்கு கொண்டு சென்ற சட்டத்தரணிகள் அது தொடர்பில் நீதிமன்ற பதிவாளரிடமும் முறைப்பாடு செய்துள்ளனர்.
நாவற்குழி இராணுவ முகாம் அதிகாரியால் கைது செய்யப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட 3 இளைஞர்கள் தொடர்பான ஆள்கொணர்வு மனுக்கள் சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட நிலையில் அதில் பாதிக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கலாநிதி கே.குருபரன் மற்றும் சட்டத்தரணி எஸ்.சுபாசினி ஆகியோரை நீதிமன்ற வளாகத்துக்குள் வைத்து ஒளிப்படம் எடுத்து அரச புலனாய்வுப் பிரிவினர் என நம்பப்படும் நபர்கள் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.
நீதிமன்ற வளாகத்துக்குள் அமைந்துள்ள சட்டத்தரணிகள் ஓய்வறைக்கு முன்பாக சட்டத்தரணிகள் இருவரும் உரையாடிக்கொண்டிருந்த போது, அந்த இடத்தில் பிரசன்னமாகியிருந்து அரச புலனாய்வாளர்கள் என நம்பப்படும் சிலர் சட்டத்தரணிகளை தமது அலைபேசியில் ஒளிப்படம் எடுத்துள்ளனர்.
குறித்த நபர்களை சட்டத்தரணிகள் இனம் கண்டு அவர்களை மடக்கி பிடிக்க முற்பட்ட வேளை ஒருவர் நீதிமன்ற படிகளின் ஊடாக நீதிமன்ற கட்டடத்தின் மேல் பகுதிக்கு தப்பி சென்றுள்ளார். மற்றுமொரு நபர் அங்கிருந்து தப்பி சென்று மேலதிக மன்றாடியார் அதிபதி செய்திய குணசேகர, பயணித்த வாகனத்தில் ஏறினார். வாகனத்தில் இருந்தும் சட்டத்தரணிகளை ஒளிப்படம் எடுத்துள்ளார். அச்சம்பவம் மேலதிக மன்றாடியார் அதிபதி செய்திய குணசேகரவும் அவதானித்துக்கொண்டு இருந்துள்ளார். பின்னர் அவரின் வாகனம் நீதிமன்ற வளாகத்தில் இருந்து வெளியேறி சென்றுள்ளது.
அது தொடர்பில் சட்டத்தரணி கலாநிதி கு.குருபரன் தெரிவிக்கையில் ,
குறித்த சம்பவம் மனுதாரர்களை அச்சுறுத்தும் நடவடிக்கையாகும். அதேவேளை இராணுவ சுற்றிவளைப்பின் போது இளைஞர்களை இராணுவத்தினர் கைது செய்து அழைத்து சென்றதனை நேரில் கண்ட சாட்சிகள் பலர் உண்டு. இவ்வாறு எம்மை ஒளிப்படங்கள் எடுப்பதன் ஊடாக சாட்சியங்கள் மற்றும் மனுதாரர்களை மறைமுகமாக அச்சுறுத்தும் செயற்பாடாகும்.
குறித்த ஆட்கொணர்வு மனு மேல் நீதிமன்றில் தாக்கல் செய்த பின்னர் மனுதாரர்கள் வீடுகளுக்கு சென்ற புலனாய்வாளர்கள் என நம்பப்படும் சிலர் வழக்கினை மீள பெறுமாறும் , இவ்வாறான வழக்குகளை தாக்கல் செய்வது தேவையற்ற பிரச்சனைகளை கொண்டு வரும் என மறைமுகமாக அச்சுறுத்தும் வகையில் கூறியுள்ளனர்.
அதேவேளை குறித்த வழக்கு கடந்த வருடமளவில் யாழ்.மேல் நீதிமன்றில் நீதிபதி மா.இளஞ்செழியன் முன்பாக நடைபெற்ற போது , வழக்கு விசாரணைகள் முடிந்து மனுதாரர்கள் நீதிமன்ற வளாகத்தினை விட்டு வெளியே சென்ற போது , நீதிமன்ற வளாகத்தில் கூடி நின்ற இராணுவ புலனாய்வாளர்கள் என நம்பப்படும் சிலர் மனு தாரர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டனர்
அது தொடர்பில் அடுத்த வழக்கு தவணையின் போது, நீதிபதியின் கவனத்திற்கு நாம் கொண்டு சென்றோம். அந்நிலையில் இன்றைய தினம் மீண்டும் அவ்வாறான தொரு சம்பவம் நடைபெற்றுள்ளது.
அது தொடர்பில் உடனடியாக நாம் நீதிவானின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். அத்துடன் நீதிமன்ற பதிவாளரிடமும் முறைப்பாடு செய்துள்ளோம். அதேவேளை சட்டமா அதிபரின் கவனத்திற்கும் இவ்விடயத்தை கொண்டு செல்லவுள்ளோம்.
ஆட்சி மாற்றத்தின் ஊடாக பாதுகாப்பு துறையிலும் மறு சீரமைப்பு வரவில்லை. சட்டமா அதிபர் திணைக்களத்திலும் மறு சீரமைப்பு வரவில்லை. பாதுகாப்பு துறையின் கண் கொண்டே இவ்வாறான வழக்குகளை சட்டமா திணைக்களம் பார்த்துக்கொண்டு உள்ளது. சட்டமா அதிபர் திணைகளத்தில் ஒரு மறுசீரமைப்பு வராதவரைக்கும் நீதித்துறை சுதந்திரமாக இயங்கும் சாத்தியமில்லை என மேலும் தெரிவித்தார். சட்டமா அதிபர் திணைகளம் மறுசீரமைக்கப்படாதவரை நீதித்துறை சுதந்திரமாக இயங்கும் சாத்தியமில்லை#சட்டமா அதிபர் #மறு சீரமைப்பு #முறைப்பாடு #சட்டத்தரணிகள் #நாவற்குழி #காணாமல் ஆக்கப்பட்ட