முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸவின் அமெரிக்க குடியுரிமை ரத்து செய்யப்பட்டுள்ளது. கோத்தாபய ராஜபக்ஸவின் அமெரிக்க குடியுரிமை ரத்து செய்யப்பட்டமைக்கான ஆவணம் தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக அவரது ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கோத்தாபய ராஜபக்ஸவிடம் இலங்கை மற்றும் அமெரிக்க குடியுரிமை இருந்தது. மாத்தறை மாவட்டத்தில் 1949 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 20 ஆம் திகதி பிறந்து, இலங்கை குடியுரிமையை கொண்ட கோத்தாபய ராஜபக்ஸவிற்கு, 2003 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31 ஆம் திகதி அமெரிக்க குடியுரிமை கிடைக்கப் பெற்றது.
அன்று முதல் சுமார் 16 வருடங்கள் அமெரிக்க குடியுரிமை வைத்திருந்த கோத்தாபய ராஜபக்ஸ, அதனை ரத்து செய்யுமாறு இந்த ஆண்டு ஆரம்பத்தில் விண்ணப்பம் செய்திருந்தார். கோத்தாபய ராஜபக்ஸ தனது அமெரிக்க குடியுரிமையை ரத்து செய்வதற்கு விண்ணப்பித்திருந்த நிலையில் அமெரிக்காவில் அவருக்கு எதிராக வழக்குகளும் தொடரப்பட்டிருந்தன. அவருக்கு எதிராக அமெரிக்காவில் இருவேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பு கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்திருந்தது.
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டமைக்கு, கோட்டாபய பொறுப்பு கூற வேண்டும் என தெரிவித்து, லசந்த விக்ரமதுங்கவின் மகளான அஹிம்சா விக்ரமதுங்க வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
அத்துடன், கோத்தாபய ராஜபக்ஸவுக்கு எதிராக தமிழ் இளைஞர் ஒருவரும், அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கொன்றை தாக்கல் செய்திருந்ததாக சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பு தெரிவித்திருந்தது.
கனடா பிரஜையான ரோயி சமாதானம் 2007 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கொழும்பில் பயங்கரவாத விசாரணை பிரிவினரால் சித்திரவத்தைக்கு உட்படுத்தப்பட்டிருந்ததாகவும், 2010 ஆம் ஆண்டு ஆகட்ஸ் மாதம் அவர் விடுவிக்கப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டது. சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாக குற்றஞ்சுமத்தியே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு வெளியிட்டிருந்த அறிக்கையில் அன்று சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. அமெரிக்கா – கலிபோனியா நீதிமன்றத்திலேயே இந்த இரண்டு சிவில் வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கோத்தாபய ராஜபக்ஸ போட்டியிட வேண்டும் என்றால், தனது அமெரிக்க குடியுரிமையை ரத்து செய்ய வேண்டும் என குறிப்பிட்டிருந்த சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் யஷ்மின் சூகா, அவரை விசாரணையில் சிக்க வைக்கும் இறுதித் தருணம் இதுவெனவும் சுட்டிக்காட்டியிருந்தார்.
எவ்வாறாயினும், அமெரிக்க குடியுரிமையை ரத்து செய்யக்கோரி கோத்தாபய ராஜபக்ஸ அளித்த விண்ணப்பத்துக்கு அமெரிக்கா கடந்த மே மாதம் 3 ஆம் திகதி அனுமதி வழங்கியதாக அமெரிக்காவுக்கான வெளிநாட்டு குடியுரிமை சேவை திணைக்களத்தின் முத்திரையுடன் அமெரிக்கா இந்த ஆவணத்தை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், கோத்தாபய ராஜபக்ஸவின் அமெரிக்க குடியுரிமை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அவரது ஊடகப் பிரிவு குறிப்பிடுகிறது. இலங்கை அரசியலமைப்புக்கு அமைய தேர்தல் ஒன்றில் போட்டியிடும் ஒருவர் வெளிநாட்டு குடியுரிமையை கொண்டிருக்க முடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
சில மாதங்களில் ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு விடுக்கப்படவுள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தாபய ராஜபக்ஸ களமிறங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் பின்னணியிலேயே கோட்டாபய தனது அமெரிக்க குடியுரிமையை ரத்து செய்ய விண்ணப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
(பிபிசி தமிழ்)