ஜம்மு-காஷ்மீரில் நிலவிவரும் பதற்றமான சூழல் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திர தினவிழாவை சீர்குலைக்க பயங்கரவாதிகள் திட்டமிட்டு வருவதாக கிடைத்த உளவுத்துறை தகவலையடுத்து ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக சுமார் 40 ஆயிரம் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளதுடன் அமர்நாத் யாத்திரை, மச்சாயில் மாதா யாத்திரை உள்ளிட்ட யாத்திரைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அத்துடன் ஜம்மு காஷ்மீரில் தங்கியுள்ள சுற்றுலா பயணிகள் உடனடியாக வெளியேற வேண்டும் என மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் அறிவித்ததை தொடர்ந்து சுமார் 5 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வெளியேறியுள்ளனர்.
அதேவேளை காஷ்மீரில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மற்றும் பயங்கரவாதிகள் என 7 பேரை இந்திய ராணுவத்தினர் சுட்டு வீழ்த்தியதனையடுத்து இதையடுத்து, அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் காஷ்மீரில் மெகபூபா முஃப்தி, உமர் அப்துல்லா உள்ளிட்ட தலைவர்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது, இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில் நிலவிவரும் பதற்றமான சூழல் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை நடத்தி வருகின்றார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த ஆலோசனை முடிந்ததும் பாராளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பமாகும் எனவும் பிரதமருடன் இன்று நடத்திய ஆலோசனையில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் தொடர்பாக மக்களவை மற்றும் மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. #ஜம்மு-காஷ்மீரில் #பதற்றமான #அமித் ஷா #மோடி #ஆலோசனை #சுற்றுலா பயணிகள்