காஷ்மீரில் முன்னாள் முதலமைச்சர்களான மெஹபூபா முப்தி, உமர் அப்துல்லா உள்பட பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது அரசியல் சட்டத்தை ரத்து செய்தும், மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதாக நேற்று திங்கட்கிழமை மத்திய அரசு அறிவித்திருந்தது. மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு முன்பே காஷ்மீரில் உள்ள மாநில கட்சிகளின் தலைவர்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை கூடி ஆலோசனை நடத்தியதுடன் காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தால் போராட்டம் நடத்துவது என முடிவு எடுத்திருந்தனர்.
இதனையடுத்து அன்று இரவே முன்னாள் முதலமைச்சர்களான மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெஹபூபா முப்தி, தேசிய மாநாடு கட்சி துணைத்தலைவர் உமர் அப்துல்லா ஆகியோர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேபோல ஜம்மு காஷ்மீர் மக்கள் மாநாடு கட்சி தலைவர்கள் சஜ்ஜத் லோன், இம்ரான் அன்சாரி ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் மேலும் சிலர் கைது செய்யப்படுவார்கள் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் இதற்கான காரணம் உள்ளிட்ட பல விவரங்களை தெரிவிக்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது; #காஷ்மீரில் #மெஹபூபா #உமர் அப்துல்லா #தலைவர்கள்#கைது #சிறப்புஅந்தஸ்து