தமிழக அமைச்சரவையில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராகப் பதவி வகித்த மணிகண்டன், அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.
இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி பரிந்துரையின் பேரில் அமைச்சர் எம். மணிகண்டன் அந்தப் பதவியில் இருந்து விடுவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முதலமைச்சரவையின் பரிந்துரையை ஆளுனர் பன்வாரிலால் புரோகித் ஏற்றுக்கொண்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
அதேவேளை அந்தத் துறைக்கு மாநில வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூடுதலாகக் கவனிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
ராமநாதபுரத்தைச் சேர்ந்த இவர் கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்ந்து எடுக்கப்பட்டவர். முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினரான இவரை முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அமைச்சராக நியமித்து, அவருக்கு தகவல் தொழில்நுட்ப இலாகாவை வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #தமிழக #அமைச்சர் #மணிகண்டன் #பதவிநீக்கம்