Home இலங்கை நல்லூர் முருகனுக்கு வந்த சோதனை: ‘காக்கக் காக்க ஆமி காக்க நோக்க நோக்க ஸ்கானர்நோக்க’? நிலாந்தன்…

நல்லூர் முருகனுக்கு வந்த சோதனை: ‘காக்கக் காக்க ஆமி காக்க நோக்க நோக்க ஸ்கானர்நோக்க’? நிலாந்தன்…

by admin

ஈஸ்டர் குண்டு வெடிப்பையடுத்து ஐரோப்பாவில் விமான பயணங்களுக்கான டிக்கெட் ஏஜென்ட் ஆக இருக்கும் ஒருவர் தனது நண்பருக்குக் கூறிய தகவல்களின்படி ஓகஸ்ட் விடுமுறையில் தாயகத்துக்கு வர விரும்பிய புலம்பெயர்ந்த தமிழர்களில் கிட்டத்தட்ட 90 வீதத்துக்கும் அதிகமானவர்கள் தமது பயணச்சீட்டுகளை ரத்து செய்துவிட்டார்களாம்.தாயகத்தில் வாழும் அவர்களுடைய உறவினர்களும் நண்பர்களும் இங்கு வரவேண்டாம் என்று அவர்களுக்கு ஆலோசனை கூரியதாகவும் தெரியவந்தது.

ஆனால் குண்டு வெடிப்பு நடந்த அடுத்தடுத்த மாதங்களில் நிலைமை ஒப்பீட்டளவில் வழமைக்கு திரும்பியது போல ஒரு தோற்றம் உண்டாக்கியது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அவருடைய அரசாங்கமும் நிலைமை வழமைக்கு திரும்பி விட்டது என்பதனை திரும்பத் திரும்ப வலியுறுத்திக் கூறினார்கள. கட்டுநாயக்கா விமானநிலையத்தில் கெடுபிடிகள் தளர்த்தப்பட்டன. உல்லாச பயணிகளை நீங்கள் இனி வரலாம் என்று கூறி உத்தரவாதங்கள் வழங்கப்பட்டன.

இவ்வாறான ஓரு பின்னணியில் முன்பு தாயகத்துக்கு வருவதற்காக விமானச் சீட்டுக்களை பதிவு செய்தபின் அவற்றை ரத்துச் செய்த பலரும் உற்சாகமாக விமான டிக்கெட்டுகளை திரும்ப பதிவு செய்துகொண்டு வரத் தயாராகினர.; ஒரு தொகுதியினர் ஏற்கனவே வந்து விட்டார்கள். நல்லூர் பெருவிழாவும் ஓகஸ்ட் விடுமுறையும் கிட்டத்தட்ட ஒரே காலத்தில் வரும்.இதனால் திருவிழாவையொட்டி புலம் பெயர்ந்த தமிழர்கள் தாயகத்துக்கு வருவது என்பது ஒரு கவனிப்புக்குரிய போக்காக மாறி வந்தது .குறிப்பாக 2015 இல் ஆட்சி மாற்றம் நிகழ்ந்த பின் ஏற்பட்ட ஒப்பீட்டளவில் அதிகரித்த ஜனநாயக சிவில் வெளிக்குள் நல்லூர் திருவிழாவையொட்டி தாயகத்துக்கு வரும் புலம்பெயர்ந்த தமிழர்களின் தொகை அதிகரித்துக்கொண்டே வந்தது. தாயகமும் டயஸ்போராவும் கூடும் ஒரு பண்பாட்டுப் பெருவிழாவாக நல்லூர் பெருந்திருவிழா மாறத் தொடங்கியது.

புலம்பெயர்ந்த தமிழர்கள் அங்கே பண்பாட்டு உடைகளை அணிந்து கோவில் வெளிப்பிரகாரத்தில் மணலில் கால் புதைய நடந்து மணிக்கடைகளில் ஆபரணங்களை வாங்கி அணிந்து கச்சான் கடலை சாப்பிட்டு மகிழ்ந்து ஊர் திரும்பினார்கள். ஈஸ்டர் குண்டுவெடிப்புக்குப் பின் அவ்வாறு வரக்கூடிய தமிழர்களின் எண்ணிக்கை குறையலாம் என்று ஒரு கணக்கு இருந்தது. எனினும் நிலைமைகள் தளரத் தொடங்கியதும் புலம் பெயர்ந்த தமிழர்கள் வரத்தொடங்கினார்கள்.

ஆனால் கோவில் கொடியேற்றம் அன்று பக்தர்கள் கடுமையாக சோதிக்கப்பட்ட விதம் பரவலாக விமர்சனத்துக்கு உள்ளாக்கியது. நல்லூர் பெருவிழாவையொட்டி கோவிலுக்கு வரும் அனைத்து சாலைகளிலும் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டன. சாவடிகளில் பக்தர்கள் வரிசையாக வர விட்டு சோதிக்கப்பட்டார்கள். உடற் சோதனைகளும் இடம்பெற்றன. கையில் பைகளைக் கொண்டு வருபவர்கள் கூடுதலாக சோதிக்கப்பட்டார்கள். பைகளும் சோதிக்கப்பட்டன. அது மட்டுமல்ல கால்களைக் கழுவ பக்தர்களுக்குப் போதியளவு நீர் குழாய்கள் இருக்கவில்லை. இதனால் அங்கேயும் அவர்களை வரிசையாக நிற்க வைத்து சிப்பாய்கள் அதை முகாமை செய்தார்கள். கோவில் வெளி வீதியில் முன்னரைப் போல சுதந்திரமாக திரிய முடியவில்லை என்று ஊடகவியலாளர்கள் கூறினார்கள். கோவில் வெளி வீதியிலும் சோதனைகள் இடம்பெற்றன.

ஆசார சீலர்களான சில பக்தர்கள் சோதனைகளை ஏற்றுக் கொள்ளவில்லை குளித்து முழுகி சுத்தமாக கோயிலுக்கு வந்தால் அங்கே மாமிசம் அருந்திவிட்டு வரும் பொலிசார் காவடிகளுக்கும் சோதனை வந்தது. குறிப்பாக தூக்கு காவடிகள் கோவிலுக்குள் வரமுடியாது என்று அறிவிக்கப்பட்டது. அறிவிப்பு கோவில் நிர்வாகத்தால் விடுக்கப்பட்டது என்று யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் உதயன் பத்திரிகையில் ஒரு செய்தி வெளிவந்திருந்தது. ஆனால் அது கோவில் நிர்வாகம் எடுத்த முடிவு அல்ல என்று பின்னர் தெரிய வந்தது.அந்த முடிவையும் படைத்தரப்பபே எடுத்திருக்கிறது. பக்தர்களைச் சோதிக்க வேண்டும் என்று தாங்கள் கோரிக்கை விடுக்கவில்லை என்று கோயிலை நிர்வகிக்கும் குடும்பம் கூறுகிறது. அப்படி என்றால் அந்த முடிவை எடுத்தது படைத்தரப்பா?

சில வாரங்களுக்கு முன் கதிர்காமத் திருவிழா நடந்தது. அங்கே இந்த அளவுக்கு சோதனைகள் இருக்கவில்லைஸ்கானர் கருவி மூலம் பக்தர்கள் சோதிக்கப்பட்டதோடு சரி என்பதை சிலர் சுட்டிக்காட்டினார்கள். கதிர்காமத்தில் மடுவிலும் பக்தர்களை சோதிக்கும் பொழுது அவர்களுக்கு அசௌகரியம் ஏற்படக்கூடாது என்ற கவனிப்பு இருந்தது. பக்தர்களை அவமதிக்கும் விதத்தில் சோதிக்கக் கூடாது என்ற அக்கறை இருந்தது.ஆனால் நல்லூரில் அப்படியல்ல. 2009-க்கு முன்னர் எப்படித் தமிழ் மக்கள் சோதிக்கப் பட்டார்களோ அப்படித்தான் இப்போதும் நடைபெறுகிறது என்று ஒரு தொகுதி பக்தர்கள் குறைபட்டார்கள்.கோவிலுக்கு வரும் ஒவ்வொரு பக்தரும் ஏன் ஒரு சஹ்ரானாக இருக்கக் கூடாது என்று சந்தேகித்து அவர்களை சோதிப்பது போலிருக்கிறது என்று பக்தர்கள் கூறுகிறார்கள்.

சோதனைகளை ஏன் முருகப் பெருமானின் சோதனைகள் என்று எடுத்துக் கொள்ளக் கூடாது? என்று கேட்கும் அப்பாவிகளும் உண்டு. இப்படிப்பட்ட சோதனைகளைத் தாண்டி பக்தர்கள் தன்னை வழிபட வருவார்களா என்று முருகப்பெருமான் சோதிக்கிறார் என்று ஏன் எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் அவர்கள் கேட்கிறார்கள.;ஆமியை ஏன் கடவுளின் கருவியாக ஏற்றுக் கொள்ளக்கூடாது?என்று கேட்டால் அந்த ஆமியை பிறகு ஜெனிவாவில் குற்றம் சாட்டக் கூடாது.

இப்படி படைத் தரப்பு சோதிக்கக் கூடாது என்று சொன்னால் அதன்பின் விழாக்காலங்களில் நடக்கக்கூடிய அனர்த்தங்களுக்கு நீங்கள் பொறுப்பு ஏற்பீர்களா?என்று கேட்பவர்களும் உண்டு. இது ஒரு முக்கியமான கேள்வி. இது எமது கடவுள் நம்பிக்கை மீதான ஒர் அடிப்படைக் கேள்;வி. ஒரு கோவிலுக்கு ஏன் போகிறோம்?கடவுளை நம்பித்தானே?கடவுள் காப்பாற்றுவார் என்று நம்பித்தானே? அக்கோவிலில் எங்களுக்கு ஏதும் நடந்தால் அதற்கு கடவுள்தானே பொறுப்பு?அந்த இழப்பையும் கடவுளின் சித்தம் என்று என் ஏற்றுக் கொள்ளக் கூடாது?மாறாக கோவிலையும் பக்தர்களையும் படைத்தரப்பு பாதுகாக்க வேண்டும் என்று எதிர் பார்த்தால் அதற்கு என்ன அர்த்தம்? கடவுள் பாதுகாக்கும் சக்தியை இழந்து விட்டார் என்பதா? அல்லது கடவுள் எங்களைப் பாதுகாக்க மாட்டார் என்று நம்புகிறோமா?ஆயின் கடவுளுக்கும் எமக்கும் இடையிலான உறவு எத்தகையது?

அது ஒரு நம்பிக்கையின் அடிப்படையிலான உறவு இல்லையா?அதில் பூரண சரணாகதி இல்லையா?அது ஒரு பொய்யுறவா?அல்லது அது ஒரு வர்த்தக உறவா?அது குறைந்தபட்ஷம் வர்த்தக உறவு என்று எடுத்துக் கொண்டாலும் அங்கேயும் ஒரு பிரச்சினை இருக்கிறது.வர்த்தகத்திலும் இருதரப்பு நம்பிக்கைகள் அவசியம். நம்பிக்கைகள் இல்லையென்றால் அங்கே வர்த்தக உறவும் இல்லை. எனவே இது எமது கடவுள் நம்பிக்கை பற்றிய ஒரு விவாதம.; நாம் கடவுளை விசுவாசமாக நம்பவில்லை என்று பொருள்.கடவுளைவிட ஆர்மியும் போலீசும் சக்தி மிக்கவர்கள் என்று நம்புவதாகப் பொருள்.’கடவுளைப் பிரார்த்தியுங்கள் ஆனால் வெடி மருந்துகளை நனைய விட்டு விடாதீர்கள்’ என்று நெப்போலியன் கூறியது போன்றதா இதுவும்? ஆனால் இதே படைத் தரப்பின் மீதுதான் தமிழர்கள் ஜெனிவாவில் போர்க்; குற்றச் சாட்டுக்களை சுமத்தி வருகிறார்கள் என்பது ஓர் அடிப்படை முரண்.

இந்த விவாதங்களின் பின்னணியில் இக்கட்டுரை எழுதப்படும் நாளில் கிடைத்த ஒரு செய்தியின்படி பக்தர்களைச் சோதிப்பதற்கு கதிர்காமத்தில் பயன்படுத்தப்பட்டதை போன்று ஸ்கானர்கருவிகள் நல்லூரிலும் பயன்படுத்தப்படும் என்று தெரியவருகிறது.

அவர்கள் எதையும் பயன்படுத்தட்டும். ஆனால் ஒரு காவற் கடவுளின் ஆலயத்தில் பக்தர்களைக் காப்பதற்கு படைத் தரப்பை அனுமதிப்பது என்பது காவற் கடவுளையும் பக்தர்களையும் அவமதிப்பதாக அமையாதா?இது தொடர்பில் கருத்துக் கூறுவதற்கு இந்துமதத்தில் எந்த ஒரு அமைப்பும் கிடையாதா?சோதனை நடவடிக்கைகளுக்கும் தமக்கும் தொடர்பு இல்லை என்று கோயிலை நிர்வகிக்கும் குடும்பம் கூறுகிறது. கோவிலில் எல்லைக்குள் வாழ்பவர்களுக்கு வழங்கப்படும் விசேட பாஸ் நடைமுறையிலும் படைத்தரப்பின் கண்காணிப்பு இருப்பதாக மாநகர சபை கூறுகிறது. யார் யாருக்கு பாஸ் வழங்கப்படுகிறது என்ற விவரம் படைத் தரப்பிற்கு அறிவிக்கப்பட வேண்டுமாம்.

இப்படிப் பார்த்தால் நல்லூர் திருவிழாவில் நடக்கும் சோதனைகளுக்கு தமிழ் மக்கள் தரப்பில் யாரும் பதில் கூறும் நிலையில் இல்லை. படைத்தரப்பு கோவிலின் பாதுகாப்பிற்கும் பக்தர்களின் பாதுகாப்பிற்கும் முழுப்பொறுப்பை தன் கையில் எடுத்துக் கொண்டுள்ளது. இது தொடர்பில் எந்த ஓர் இந்து அமைப்பும் இன்றுவரையிலும் கருத்து தெரிவித்திருக்கவில்லை.எந்த ஓர் இந்துமதப் பெரியாரும் கருத்து தெரிவித்திருக்கவில்லை.ஆயின் அவர்களுடைய கடவுள் நம்பிக்கையைப் பாதுகாப்பு அளவு கோல்களால்தான் அளக்க வேண்டுமா ?

2009க்குப் பின் தமிழ் பகுதிகளில் பழைய கோயில்கள் பெருப்பிக்க்கப்படுகின்றன. இடிந்த கோவில்கள் மீளக் கட்டி எழுப்பப்படுகின்றன. சிறிய பெரிய கோவில்கள் புனருத்தாரணம் செய்யப்பட்டு புது வண்ணம் பூசப்பட்டு ஜொலித்துக் கொண்டு தெரிகின்றன. இவ்வாறு கோவில்களைக் கட்டுவதற்கு செலவழிக்கப்படும் பணத்தின் பெரும்பகுதி டயஸ்போராவில் இருந்து வருகிறது.

அதேசமயம் கல்வி,சுகாதாரம்,முன்னாள் புலிகள் இயக்கத்தவர்களின் பாதுகாப்பு, சிறுவர் பாதுகாப்பு, பெண்கள் பாதுகாப்பு, முதியோர் பாதுகாப்பு போன்ற துறைகளில் உதவிகளைப் புரிவதற்கு அறக்கட்டளைகள் மிகக் குறைந்த அளவே உண்டு. தமிழ் பகுதிகளில் உள்ள எத்தனை பெருங்கோவில்களில் பெரும் திருவிழாக்களில் திரட்டப்படும் நிதி அறப்பணிகளுக்கு செலவழிக்கப்படு படுகிறது?சன்னதியில் அன்ன தானம் நடப்பதைப் போல?தமிழ் பகுதிகளில் உள்ள எத்தனை கோவில்கள் முதியவரை பராமரிக்கும் இல்லங்களையும் பெண்கள் சிறுவர்களை பராமரிக்கும் இல்லங்களையும் நடாத்துகின்றன? எத்தனை கோவில்கள் தமது வறிய பக்தர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நற்பணிகளில் ஈடுபடுகின்றன?

ஆயுத மோதல்களுக்கு பின்னரான ஒரு சமூகத்தில் கூட்டுக் காயங்களிலும் கூட்டு மனவடுக்களிலும் அழுந்திக் கிடக்கும் ஒரு தொகுதி மக்களுக்குக் கூட்டுச் சிகிச்சையாக அமையவில்ல அறப் பணிகளைச் செய்வதற்கு எத்தனை பெரும் கோவில்கள் தயார்?எத்தனை அறக்கட்டளைகள் உண்டு?

கிறிஸ்தவ ஆவிக்குரிய சபைகள் தமிழக்; கிராமங்களுக்குள் நுழைந்து மதமாற்றம் செய்கின்றன என்று முகநூலில் செய்திகள் வருகின்றன. அவ்வாறு மதமாற்றம் செய்யும் சுயாதீன திருச்சபைகளுக்கு எதிராக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. மத மாற்றங்களுக்கு அடிப்படைக் காரணமாக இருப்பது வறுமையும் அறியாமையும் சாதி ஏற்றத்தாழ்வுகளும்தான்.தமது மக்களின் வறுமையையும் அறியாமையையும் இல்லாமல் செய்வதற்கு எத்தனை இந்து அறக்கட்டளைகள் நாட்டில் உண்டு? சாதி காரணமாக வழிபாட்டுரிமை மறுக்கப்பட்ட இந்துக்களுக்காக குரல் கொடுக்க எத்தனை இந்து அறக்கட்டளைகள் நாட்டில் உண்டு? அப்படிப்பட்ட அமைப்புகளுக்கு காசை அள்ளி வழங்க எத்தனை கொடை வள்ளல்கள் உண்டு?

ஈழத்தமிழர்களின் பண்பாட்டுத் தலைநகரத்தில் அமைந்திருக்கும் ஒரு பெரும் கோவில் நல்லூர். அக் கோவில் திருவிழாவில் பக்தர்களையும் கோவிலையும் படைத்தரப்பிடம் பாதுகாக்க கொடுத்துவிட்டு இந்து அமைப்புகளும் இந்துமத பெரியாரும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? கன்னியாவில் தமது வழிபாட்டுரிமையை உறுதிப்படுத்துவதற்காகத் திரண்ட மக்களைத் தடுத்து நிறுத்தியதும் முகத்தை கறுப்புத் துணியால் மூடிக்கொண்டு சூழ்ந்து நின்று அச்சுறுத்தியதும் இதே படைத்தரப்பும் போலீசும்தானே?கன்னியாவிலும் பழைய செம்மலையிலும் இந்துக் கோவில்களை ஆக்கிரமிக்கும் அதே சிங்கள பவுத்த பெரும் தேசியத்தின் உபகரணம் ஆகிய படைத்தரப்பு தமது பெரும் கோவில்களையும் பெரும் திருவிழாக்களையும் பாதுகாப்பதை பக்தர்கள் ஏற்றுக் கொள்கிறார்களா? கோவில் நிர்வாகம் ஏற்றுக் கொள்கிறதா? சமயப் பெரியார்கள் ஏற்றுக் கொள்கிறார்களா?அல்லது இதுபோன்ற அகமுரண்பாடுகள் எவற்றைப் பற்றியும் அலட்டிக் கொள்ளாது தமிழ்ச் சமூகம் தன்பாட்டில் போய்க்கொண்டேயிருக்கிறதா?

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More