இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் டெல்லியில் முகாமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் எதிர் வரும் நவம்பர் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளராக கோத்தாபய ராஜபக்ச அறிவிக்கப்பட்டுள்ளார். கோத்தாபய ராஜபக்ச வுக்கு அமெரிக்கா ஆதரவு வழங்குவதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில் கோத்தாபய ராஜபக்சவை சந்திக்க இந்திய பிரதமர் மோடி மறுத்து உள்ளதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
இதேவேளை கோத்தாபய ராஜபக்ச ஜனாதிபதியானால் நாடு அபிவிருத்தி அடையாது நாசமாகிவிடும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கா பண்டாரநாயக்கா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ராஜபக்ச குடும்பம் ஒரு கொலைகார கும்பல் அவர்களை தான் ஒருபோதும் ஆதரிக்கப் போவதில்லை என்றும் சந்திரிகா கூறியுள்ளார்.
கோத்தாபய ராஜபக்சவை எதிர்த்து ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவின் மகன் சஜித் பிரேமதாச களமிறங்கக் கூடும் என கூறப்படுகிறது. நவம்பரில் தானே தேசத்தின் தலைவராவேன் என சஜித் பிரேமதாச கூறி வருகிறார்.
சிங்கள கட்சிகள் ஜனாதிபதி தேர்தலில் தீவிரமாக இருக்கும் நிலையில் தமிழ் அரசியல் கட்சிகள் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. அனைத்து அரசியல் கட்சிகளும் அதிகாரப்பூர்வமாக வேட்பாளர்களை அறிவித்த பின்னர் நிலைப்பாட்டை அறிவிக்கலாம் என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடாக இருந்து வருகிறது.
பொதுவாக இலங்கை அதிபர் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து இந்தியாவுடன் ஆலோசனை நடத்திய பின்னரே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவெடுப்பது வழக்கம். அதனால் இம்முறையும் இந்தியாவின் நிலைப்பாட்டை தெரிந்து கொள்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் டெல்லியில் முகாமிட்டுள்ளார் என கூறப்படுகிறது. ஆனால் மருத்துவ சிகிச்சைக்காக மட்டுமே இரா. சம்பந்தன் டெல்லி சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.