யாழ்ப்பாணம், காங்கேசன்துறைத் தேர்தல் தொகுதியில், குறிப்பிட்ட தொகை வாக்காளர்களின் பெயர்ப்பட்டியல்களை நீக்காதவாறு ஏற்கனவே உள்ள அரச தீர்மானத்தைத் தொடருமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் வேண்டுகோள் முன்வைக்க முடியும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
யாழ்ப்பாண மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் மாவட்டச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. அதில், காங்கேசன்துறைத் தேர்தல் தொகுதியின் 21 கிராம அலுவலர் பிரிவு நிலம் இதுவரை விடுவிக்கப்படாத விடயத்தை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் எடுத்துக்கூறினார்.
யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தின் காங்கேசன்துறைத் தேர்தல் தொகுதியில் 14 கிராம அலுவலர்கள் பிரிவுகள் முழுமையாகவும் 7 கிராம அலுவலர் பிரிவுகள் பகுதியளவிலுமாக மொத்தம் 21 கிராம அலுவலர் பிரிவுகள் கொண்ட நிலம் இதுவரை விடுவிக்கப்படவில்லை. விடுவிக்கப்பட்ட பகுதிகளில் எந்தத் தேவையும் பூர்த்தி செய்யப்படாமலுள்ளன.
அவ்வாறிருக்கையில் அந்தப் பகுதி மக்கள் சொந்த இடம் திரும்புவதற்குத் தயங்குகின்றனர். இந்த நிலையில் தற்போதுள்ள வாக்காளர் பெயர்ப் பட்டியலிலிருந்து அத்தகையவர்களின் பெயர்களை நீக்க முற்படுவது அந்தப் பகுதி மக்களின் அடையாளத்தை பாதிக்கும் செயலாக அமையும்.
அந்தப் பகுதியில் மீள்குடியேற்றம் நிறைவுபெறும் வரையில் காங்கேசன்துறைத் தேர்தல் தொகுதியின் வாக்காளர் பட்டியலிலிருந்து மக்களின் பெயர்களை நீக்கக் கூடாது – என்று சுமந்திரன் கோரிக்கை முன்வைத்தார்.
இதற்குப் பதிலளித்து உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, காங்கேசன்துறைத் தேர்தல் தொகுதி தொடர்பில் ஏற்கனவே உள்ள அரச தீர்மானத்தை தொடருமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் வேண்டுகோளை முன் வைக்க முடியும். இதனால் குறித்த விடயத்தை உடனடியாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் கவனத்துக்குக் கொண்டு செல்லுங்கள். அதற்கு எமது ஒத்துழைப்புக் கிட்டும் – என்று தெரிவித்தார்.
அந்தத் தொகுதியிலுள்ள பெயர்ப்பட்டியலிலிருந்து அங்கு குடியிருக்காதவர்களின் பெயர்களை நீக்குவதாக இருந்தால் நாடாளுமன்றுக்குத் தெரிவு செய்யப்படும் தமிழ் உறுப்பினர்களின் எண்ணிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டு வருகின்றது. #யாழ்ப்பாணம் #காங்கேசன்துறை #தேர்தல் #ரணில்
-மயூரப்பிரியன்