நிலவின் தென்துருவப் பகுதிகளை ஆராய்ச்சி செய்வதற்காக சந்திரயான் 2 விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து, கடந்த ஜூலை 22ஆம் திகதி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
இதுவரை எந்த நாடும் நிலவின் தென்துருவ மண்டலத்தில் கால் பதிக்காத நிலையில், இஸ்ரோ சந்திரயான் 2 விண்கலனை அனுப்பியுள்ளது முக்கியமானதாகக் கருதப்படுகிறது. சந்திரயான் 2 முதன்முதலாகப் படம் பிடித்த பூமியின் படத்தை, இஸ்ரோ கடந்த ஓகஸ்ட் 4ஆம் திகதி வெளியிட்டது. அதன்பின், ஓகஸ்ட் 6ஆம் திகதி , 5ஆவது மற்றும் இறுதி புவி வட்டப்பாதைக்கு உயர்த்தப்பட்டது.
ஓகஸ்ட் 14ஆம் திகதி புவிவட்டப் பாதையிலிருந்து சந்திரனின் வட்டப்பாதையை நோக்கி விண்கலத்தை செலுத்தும் பணியை இஸ்ரோ விஞ்ஞானிகள் செயல்படுத்தினர். ஓகஸ்ட் 20ஆம் திகதி திட்டமிட்டபடி நிலவில் நீள்வட்ட சுற்றுப் பாதையில் சந்திரயான் 2 நுழைந்ததாக இஸ்ரோ மையத் தலைவர் சிவன் அறிவித்தார்.
இந்நிலையில், நிலவின் சுற்று வட்டப்பாதையில் சுற்றி வரும் சந்திரயான் 2, நிலவைப் புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது. இந்தப் புகைப்படத்தை இஸ்ரோ நேற்று இரவு வெளியிட்டுள்ளது. சந்திரனின் மேற்பரப்பிலிருந்து 2,650 கிமீ உயரத்திலிருந்து கடந்த 21ஆம் திகதிஇந்தப் படத்தை சந்திரயான் 2 எடுத்துள்ளது. #சந்திரயான் 2 #நிலவை #புகைப்படம்