தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் மேலும் வடக்கில் விடுவிக்கக்கூடிய காணிகளை விடுவிக்க துரித நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி உரிய துறைகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
யுத்தம் நிறைவடைந்த தருணத்தில் வடக்கில் பாதுகாப்பு துறையினர் வசமிருந்த தனியார் மற்றும் அரச காணிகளை மீண்டும் அதன் உரிமையாளர்களிடம் கையளிப்பதற்காக கடந்த 05 வருட காலமாக அரசாங்கம் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
முப்படையினருடன் இணைந்து வடக்கிலுள்ள காணிகளை பார்வையிட்டு தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படாதவாறு விடுவிக்கக்கூடிய அனைத்து நிலங்களையும் துரிமாக இனங்காண்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அது தொடர்பான அறிக்கையொன்றினை எதிர்வரும் ஒக்டோபர் 01ஆம் திகதிக்கு முன்னர் ஆளுநரிடம் சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி இதன்போது அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
வடக்கின் நில விடுவிப்பு தொடர்பாக நேற்று (28) நண்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த பணிப்புரையை வழங்கினார்.