திருமண விழாவின் காணொலிப்பதிவை காண்பித்து மணமகளின் தாலி உள்பட வெளிநாட்டில் இருந்து வருகை தந்திருந்த உறவினர்கள் அனைவரினதும் 60 பவுண் தங்க நகைகளை வீட்டினுள் புகுந்த கொள்ளையடித்துக் கொண்டு தப்பித்த கும்பலில் மூன்று பேர் கைது செய்யப்பட்டு மல்லாகம் நீதிவானின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். நவாலி தெற்கு கொத்துக்கட்டி வீதி கடந்த 29ஆம் திகதி அதிகாலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் இருவர் மீது வாள் வெட்டுத் தாக்குதலும் நடத்தப்பட்டது. அதிகாலை 1.30 மணியளவில் 5 பேர் கொண்ட கொள்ளைக்கும்பல் வீட்டின் முன்வாயில் வழியாகவும் சமையல் அறையின் மேற்பகுதி வழியாகவும் வீட்டுக்குள் நுழைந்தது.
வீட்டில் இருந்த பெரிய தந்தை வழிமுறையான ஒருவரைக் கட்டிவைத்துவிட்டு நடைபெற்ற திருமண நிகழ்வின் காணொலிப்பதிவை காண்பித்து அதில் அணிந்திருந்த தங்க ஆபரணங்களை தருமாறு கொள்ளைக் கும்பல் கத்தி முனையில் அங்கிருந்தவர்களை அச்சுறுத்தியது.
கும்பலின் அச்சுறுத்தலுக்கு அடிபணியாததால் வெளிநாட்டில் இருந்து சென்றவர் மீது கும்பல் வாளால் டெ்டியதுடன் தாக்குதலையும் நடத்தியது. நிலமையை உணர்ந்த பெண்ணொருவர் சகல நகைகளையும் எடுத்து தருவதாககூறிய நிலையில் அந்தக் கும்பல் ஒவ்வொரு இடமாகத் தேடி அனைத்து நகைகளையும் பெற்றுக்கொண்டனர்.
கும்பலின் செயற்பாடு தொடர்பில் திருமண வீட்டின் மணமகளால் கைத்தொலைபேசி மூலம் குறுந்தகல் (SMS) மூலம் தெரியப்படுத்தியதன் பயனாக அயல்வீ்டுக்காரர் ஒருவர் ஏனையவர்களுக்கு தகவல் வழங்கியுள்ளார். இதனை அறிந்த கொள்ளைக்கும்பல் வெளியில் நின்ற அயல்வீட்டுக்கார நபரை வெட்டிக்காயப்படுத்திவிட்டு தப்பிச் சென்றது.
இந்த சம்பவத்தில் வீட்டில் இருந்தவர்களின் 60 பவுணுக்கு மேற்பட்ட தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதுடன் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களின் கடவுச் சீட்டுக்களும் கைப்பைகளும கொள்ளையடிப்புச் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் மானிப்பாய் காவற்துறையினரிடம் முறைப்பாடு வழங்கப்பட்டதை அடுத்து காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர்.
இதன்போது யாழ்ப்பாணத்தில் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய நாகேஸ்வரன் என்பவருடைய சகாக்களே இந்தக் கொள்ளையிலும் ஈடுபட்டது என்று தடயங்கள் மூலம் காவற்துறையினர் கண்டறிந்தனர்.
அதனடிப்படையில் சங்கானை, கட்டுடை மற்றும் நவாலியைச் சேர்ந்த மூவரை மானிப்பாய் காவற்துறையினர் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர். அவர்கள் மூவரும் மல்லாகம் நீதிவான் முன்னிலையில் நேற்று முற்படுத்தப்பட்டனர்.
சந்தேகநபர்கள் மூவருடன் மேலும் சிலரைக் கைது செய்யவேண்டும் என்று காவற்துறையினர் நீதிவானிடம் சமர்ப்பணம் செய்தனர். அதனடிப்படையில் சந்தேகநபர்கள் மூவரையும் 14 நாள்கள் விளக்கமறியலில் வைக்க மல்லாகம் நீதிவான் உத்தரவிட்டார்.