குருணாகல் காவற்துறைப் பிரிவிற்குட்பட்ட கோவகொட்டுவ சந்தியில் மோட்டார் சைக்கிளில் சந்தேகத்திற்கிடமாக பயணித்த இருவரை காவற்துறையினர் கைது செய்துள்ளனர். 31 ஆம் திகதி இரவு 11.40 மணியளவில் கைது செய்யப்பட்ட இவர்களிடம் இருந்து, ரி 56 ரக துப்பாக்கி ஒன்றும் அதற்கான தோட்டாக்கள் 10 உடன் கூடிய மெகசின் ஒன்றையும் காவற்துறையினர் கைப்பற்றி இருந்தனர்.
புத்தள இராணுவ முகாமில் கடமையாற்றும் குருணாகல், தாஹிகமுவ பகுதியை சேர்ந்த 46 வயதுடைய ஒருவரும், நிட்டம்புவ, வதுபிட்டிவல விஜயபா பாபல ரெஜிமேன்டின் இராணுவ அதிகாரி ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களின் வீட்டை குருணாகல் காவற்துறையினர் மோப்ப நாயின் உதவியுடன் நேற்று சோதனையிட்டனர். இதன்போது மோட்டார் ஓட்டுனரின் வீட்டில் இருந்து ரி 56 ரக துப்பாக்கி ஒன்று, அதனை சுத்தம் செய்வதற்கான கருவிகள், இத்தாலியில் உற்பத்தி செய்யப்பட்ட ரைபல் ஒன்று, துப்பாக்கிகளுக்காக பயன்படுத்தும் தொலைநோக்கு கருவி ஒன்று, போரா 12 துப்பாக்கிகளுக்காக பயன்படுத்தும் வெற்று தோட்டாக்கள் 6, இராணுவத்தினர் பயன்படுத்தும் பெக் 2, பெல்ட் ஓடர் 2 மற்றும் பல பொருட்கள் இதன்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நபர்களை நேற்று குருணாகல் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது 48 மணிநேர தடுப்புக்காவலில் வைக்க உத்தரவிடப்பட்டிருந்தது. சம்பவம் தொடர்பில் குருணாகல் காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.