தலவாக்கலை நகரில் கழிவு தேயிலை தூள் கலப்படம் செய்து வியாபார நடவடிக்கையில் ஈடுப்பட்ட குற்றச்சாட்டில் இருவர் 04.09.2019 அன்று இரவு தலவாக்கலை விசேட அதிரடிபடையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் நீண்ட நாட்களாக பாவனை செய்யக்கூடிய தேயிலை தூள்களுடன் கழிவு தேயிலை தூள்களை கலவையிட்டு வியாபாரத்தில் ஈடுப்பட்டு வந்துள்ளதாக அதிரடிப் படையினர் தெரிவித்தனர்.
கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, குறித்த இடத்திலிருந்து 200 கிலோ கிராம் கழிவு தேயிலை தூளும் கைப்பற்றப்பட்டுள்ளது. அதன்பின் கைப்பற்றப்பட்ட கழிவு தேயிலை தூளையும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களையும் தலவாக்கலை காவல் நிலையத்தில் விசேட அதிரடிபடையினர் ஒப்படைத்துள்ளனர்.
அத்தோடு, சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபரை காவற்துறை பிணையில் விடுதலை செய்ய நடவடிக்கைகள் எடுத்திருப்பதாகவும், எதிர்வரும் நாட்களில் நுவரெலியா நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் எடுத்திருப்பதாகவும் காவற்துறையினர் தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பில் தலவாக்கலை விசேட அதிரடிபடையினரும், தலவாக்கலை காவற்துறையினரும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
(க.கிஷாந்தன்)