Home இலங்கை காலம் கடந்த ஞானம் – பி.மாணிக்கவாசகம்..

காலம் கடந்த ஞானம் – பி.மாணிக்கவாசகம்..

by admin

ஐக்கிய தேசிய கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து உருவாக்கிய நல்லாட்சி அரசாங்கத் தரப்பினர் ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்பதையே பிரதான நோக்கமாகக் கொண்டிருந்தனர். அத்துடன் இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காண்பதாக அளித்த உறுதிமொழிக்கு அமைவாகவே 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராகிய மைத்திரிபால சிறிசேனவை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஆதரித்து வெற்றி பெறச் செய்தது.

ஏட்டிக்குப் போட்டியான நிலைப்பாட்டைக் கொண்டிருந்த இந்த இரண்டு கட்சிகளும் இணைந்து ஓர் அரச நிர்வாகத்தில் இணைந்திருந்த ஓர் அரிதான சந்தர்ப்பத்தின் மூலம் புரையோடிப்போயுள்ள தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கையைத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கொண்டிருந்தது. தமிழ் மக்களும் அந்த நிலைப்பாட்டின் நியாயத்தையும் அவசியத்தையும் உணர்ந்து கொண்டிருந்தனர்.

ஆனால் நல்லாட்சி அரசாங்கம் எந்த நோக்கத்திற்காக உருவாகியதோ அந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகக் கொண்டிருந்த முயற்சிகளுக்கான அரசியல் நடவடிக்கைகளில் ஒரு கட்டத்தின் பின்னர் தளர்ச்சியும் அக்கறையற்ற போக்கும் இரு கட்சிகளுக்கும் ஏற்பட்டதன் விளைவாக அந்த முயற்சிகள் தாமதப்பட்டு பி;ன்னர் கிடப்பில் போடப்படுகின்ற நிலைமைக்கு ஆளாகின. ஐக்கிய தேசிய கட்சிக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் தலைமை நிலையில் ஏற்பட்ட அதிகாரப் போட்டி தீவிரமாகத் தலையெடுத்ததனால் நாட்டின் அரசியல் உறுதியற்ற நிலைமைக்குள் வலிந்து தள்ளப்பட்டது.

இத்தகைய ஒரு பின்புலத்தில் வரப்போகின்ற ஜனாதிபதி தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் தமிழ் மக்களும் என்ன செய்யப் போகின்றார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்குப் பதிலளிக்கும் வகையில் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய சுமந்திரன் இந்து நாளிதழுக்கு அளித்துள்ள நேர்காணலில் முக்கிய விடயங்களை வெளிப்படுத்தி உள்ளார். அவருடைய கருத்துக்கள் தமிழ் மக்களின் மனங்களைப் படம் பிடித்துக் காட்ட முயன்றுள்ளதுடன், தமிழர் தரப்பு அரசியலின் யதார்த்தத்தையும் வெளிப்படுத்தி உள்ளன.

இரண்டு தடவைகள் திசைமாறிய மைத்திரி

நல்லாட்சி அரசாங்கம் தொடக்கத்தில் நம்பிக்கையை ஏற்படுத்திவிட்டு அதனை நிறைவேற்றுவதாகப் போக்குக் காட்டி ஏமாற்றியதனால், தமிழ் மக்கள் அதிருப்தியும் ஏமாற்றமும் அடைந்துள்ளார்கள் என்று அவருடைய நேர்காணல் கருத்து சாராம்ச நிலையில் குறித்துக் காட்டியுள்ளது. தமிழ் மக்கள் மட்டுமல்ல. தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் எதிர்பாராத இந்த ஏமாற்றத்தில் சிக்கித் தவிக்கின்றது என்றே கூற வேண்டும்.

மேலோட்டமான அபிவிருத்திச் செயற்பாடுகளை முன்னெடுத்த போதிலும், யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் பாதிக்கப்பட்ட மக்களின்; வாழ்வாதாரம் உள்ளிட்ட உண்மையான மீள் எழுச்சிக்குரிய நடவடிக்கைகளை மகிந்த ராஜபக்ச அரசாங்கம் சரியான முறையில் திட்டமிடவில்லை. மேற்கொள்ளவுமில்லை.

இந்த நிலையில் ‘உரிமைகள் என்றுவரும் போது தமிழர்கள் பெரிதாக எதையும் எதிர்பார்க்கக்கூடாது என்று ராஜபக்ஷ வெளிப்படையாக உணர்த்தினார். ஆனால் இந்த (நல்லாட்சி) அரசாங்கத்தை நம்பிக்கையுடன் நோக்கியமைக்குக் காரணங்கள் இருந்தன. பிறகு அவர்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறினார்கள். எமது மக்கள் ஏமாற்றப்பட்டு, கடும் அதிருப்திக்கு உள்ளாகியிருக்கிறார்கள்’ என்று சுமந்திரன் இந்து நாளிதழுடனான நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தில் ஏற்பட்ட குளறுபடியான மாற்றங்களில் ஜனாதிபதி மைத்திரிபாலாவின் நிலைப்பாடு குறித்து விளக்கம் அளிக்கும் வகையில் சுமந்திரன் கருத்துரைத்துள்ளார். ‘2015 இல் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்ட மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாடுகளில் காணப்பட்ட திசைமாற்றத்திற்கும், தற்போதைய திசைமாற்றத்திற்கும் இடையே பெருமளவு வேறுபாடு இருக்கிறது. போர் வெற்றித் தினத்தைக் கொண்டாடுவதை நிறுத்தியதன் மூலமும், தேசிய தினத்தன்று தமிழிலும் தேசியகீதத்தைப் பாடுவதற்கு ஏற்பாடு செய்ததன் மூலமும் இனநல்லிணக்கம் மற்றும் புதியதொரு அரசியலமைப்பு ஆகியவற்றை உறுதியாக நியாயப்படுத்தியதன் மூலமும் மிகவும் ஆக்கபூர்வமானதொரு வழியில் நல்லிணக்கத்தை நோக்கிய செயற்பாடுகளுக்கு முன்னுதாரணமாக வழிநடத்தியவர் ஜனாதிபதியே’ என அவருடைய ஆரம்ப நிலைமை குறித்து சுமந்திரன் கூறியுள்ளார்.
ஆனால் அவருடைய நிலைமை இப்போது அவ்வாறில்லை என்பதைப் பின்வருமாறு சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால் இப்போது அவர் அவை எல்லாவற்றிலிருந்தும் பின்வாங்கிவிட்டது பெரும் கவலை தருகிறது. நாங்கள் பெரும் ஏமாற்றமும், அதிருப்தியும் அடைந்திருக்கிறோம். ஏனென்றால் இனவெறிக்கு வசப்படக்கூடியவரல்ல ஜனாதிபதி என்பதை நாமறிவோம். அதிகாரப்பகிர்வு குறித்த மிகவும் முற்போக்கான கருத்துக்களை அவர் கொண்டிருக்கிறார். ஆனால் இப்போது அவர் தேர்தல் மற்றும் ஏனைய அரசியல் காரணங்களால் நிர்பந்திக்கப்பட்டு, அவர் தனது குணவியல்புக்குப் புறம்பான முறையில் நடந்துகொண்டிருக்கிறார். – இதன் மூலம், தமிழ் மக்களின் அரசியல் நலன்களில் ஜனாதிபதி எத்தகைய உறுதிப்பாட்டைக் கொண்டிருக்கின்றார் என்பது சுமந்திரனுடைய கூற்றில் வெளிப்பட்டுள்ளது.

ஓத்த கருத்துடைய உள்நோக்கம் கொண்ட நடவடிக்கைகள் போர்க்குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள சவேந்திர சில்வா லெப்டின் ஜெனரலாக பதவி உயர்த்தப்பட்டு இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டமை பரந்த அளவில் கண்டனங்களுக்கும் விமர்சனங்களுக்கும் உள்ளாகி இருக்கின்றது. அது பற்றி கருத்துரைத்த சுமந்திரன், நல்லாட்சி அரசாங்கமாகிய கூட்டரசாங்கத்தில் வேறுபாடுகள் தலையெடுத்த நிலையில் கடும் போக்கைக் கடைப்பிடித்து, ரணில் விக்கிரமசிங்கவை நீக்கிவிட்டு ராஜபக்சவை நாட்டின் பிரதமராக நியமித்ததன் அடிப்படையிலேயே சவேந்திர சில்வாவின் நியமனத்தையும் நோக்க வேண்டியுள்ளது என்பது சுமந்திரனின் கருத்தாகும்.

ஆனால், பொதுஜன பெரமுன முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபாயாவை ஜனாதிபதி வேட்பாளராக நியமித்ததும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோத்தாவைப் போலவே, போர்க்குற்றம் சுமத்தப்பட்டுள்ள சவேந்திர சில்வாவை இராணுவத் தளபதியாக நியமித்ததையும் ஒத்த கருத்து கொண்ட, ஒத்த உள்நோக்கம் கொண்ட நடவடிக்கைகளாகவே ஆய்வாளர்கள் நோக்குகின்றார்கள்.

நாட்டில் கொடுங்கோல் அரசாங்கத்தை உருவாக்குகின்ற முன்னோட்ட நடவடிக்கையாகவே இந்த இருவரையும் அதியுச்ச நிலைமைக்கு உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன என்ற கருத்து மேலோங்கியுள்ளது.

இரு கட்சி அரசாங்கமாகிய கூட்டு அரசாங்கத்திற்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கி, இக்கட்டான தருணங்களில் சர்வதேச மட்டத் நெருக்கடி நிலைமைகளில் அதனை பிணை எடுத்து விடுகின்ற வகையிலான அணுகுமுறை சார்ந்த நடவடிக்கைகளை முன்னெடுத்த செயற்பாடுகளும் ஒரு காரணம் என கருதுவதில் தவறிருக்க முடியாது. அதனை சுமந்திரனின் கூற்று உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது என்றே நோக்க வேண்டும்.

‘இரண்டு பிரதான அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்த போது நீண்டகாலப் பிரச்சினைக்குத் தீர்வொன்றைக் காண்பதற்கான மெய்யான வாய்ப்பொன்று வருகிறது என்று நம்பிய காரணத்தினால் மத்திய அரசாங்கத்துடன் ஒத்துழைத்துச் செயற்பட்டோம். என்றாலும் அவ்வாறு நாம் செய்தது எம்மைப் பாதித்திருக்கிறது. கூட்டரசாங்கம் இப்பொழுது முறிவடைந்து போயிருக்கிறது. அந்த முறிவினால் பல்வேறு பாதகமான விளைவுகளை இன்று நாம் பார்க்கின்றோம்’ என்று அவர் இந்து நாளிதழிடம் கூறியுள்ளார்.
அத்துடன் ‘அரசாங்கத்திற்கு விட்டுக்கொடுத்த, இன்னமும் விட்டுக்கொடுத்துக் கொண்டிருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தவறான குதிரையொன்றிற்கு ஆதரவளித்துப் பணத்தைக் கட்டிவிட்டது, அதன் மக்களுக்காக எதையும் சாதிக்கக்கூடியதாக இருக்கவில்லை என்றே நோக்கப்படுகின்றது. அது ஒரு உண்மையுமாகும். அடுத்த தடவை வாக்காளர்களைச் சந்திக்கும் போது அந்த உண்மையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்’ என அவர் குறிப்பிட்டுள்ளமை விமர்சகர்களும் பாதிக்கப்பட்ட மக்களும் நல்லாட்சி அரசாங்கம் தொடர்பில் கொண்டிருந்த அணுகுமுறை குறித்து வெளியிட்டிருந்த கவலையுடன் கூடிய கரிசனை மிக்க கருத்துக்களின் உண்மைத் தன்மையை வெளிப்படுத்தி உள்ளது.

காலம் கடந்த ஞானமும் நாட்டின் அரசியல் நிலைப்பாடும்

ஐக்கிய தேசிய கட்சியும்சரி சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் சரி காலம் காலமாக சிறுபான்மை தேசிய இன மக்கள் தொடர்பில் மறைமுக நிகழ்ச்சி நிரலுடன் கூடிய ஒடுக்குமுறை தந்திரோபாயச் செயற்பாடுகளையே முன்னெடுத்திருந்தன என்பது தமிழ்த்தரப்பின் அரசியல் வரலாற்று அனுபவமாகப் பதிவாகியுள்ளது. இந்த அனுபவம் தமிழ் மக்கள் மனங்களில் மிகவும் ஆழமாகப் பதிவாகி உள்ளன. இதனைக் கருத்திற் கொண்டு, இருகட்சி அரசாங்கத்தை உருவாக்குவதிலும் அதனை ஆதரித்ததிலும் தீர்க்கதரிசனத்துடன், மிக ஆழமான அரசியல் தந்திரோபாயங்களைக் கைக்கொண்டு, செயற்பட்டிருக்க வேண்டும். இந்த அரசியல் யதார்த்த ஞானம் காலம் கடந்த நிலையில் கூட்டமைப்பிடம் இருந்து இப்பொது வெளிப்பட்டிதுப்பதாகவே கொள்ள வேண்டும்.

யுத்தம் முடிவடைந்து பத்து வருடங்கள் கழிந்துவிட்டன. தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான மேலோங்கிய வலிமை கொண்ட விடுதலைப்புலிகளின் போராட்டமும் மௌனிக்கச் செய்யப்பட்டு விட்டது.

அதனால், நிர்க்கதிக்கு ஒப்பான ஒரு நிலைமையில் பலனற்றுப் போனதாக நிரூபிக்கப்பட்ட சாத்வீகப் போராட்டத்தையே மீண்டும் கையில் எடுக்க வேண்டிய நிலைமைக்குத் தமிழ் மக்கள் இப்போது தள்ளப்பட்டிருக்கின்றார்கள். ஆனாலும் அந்தப் போரட்டம் அரசாங்கத்தையோ அல்லது சிங்கள பௌத்த தேசியத்தின் மறைகர சூழ்ச்சி மிக்க பேரினவாத வளர்ச்சிக்கான நடவடிக்கைகளையோ தடுக்கவல்ல சக்தியைக் கொண்டிருக்கவில்லை.

தமிழ்த்தரப்பினர் எத்தகைய போராட்டங்களை முன்னெடுத்த போதிலும் அரச தரப்பினரும் அரசாங்கமும் அதனுடன் ஒத்தே}டுகின்ற அரசியல் பௌத்த தீவிரவாத சக்திகளும் சிங்கள பௌத்த தீவிரப் போக்கிலான செயற்பாடுகளைக் கைவிட தயாராக இல்லை. இந்த அணுகுமுறையுடன் கூடிய கொள்கைகளின் அடிப்படையில் செயற்படப் போகின்ற ஓர் அரசாங்கத்தை உருவாக்குவதற்கான போக்கிலேயே ஜனாதிபதி வேட்பாளர்கள் களமிறங்கி இருக்கின்றார்கள்.

ஏனெனில் கடந்த உள்ளுராட்சித் தேர்தலில் வாக்காளர்களின் இனவாத ஆதரவுத் தளத்தில் பொதுஜன பெரமுன தனது முன்னேற்றத்கைத் தெளிவாகக் குறித்துக் காட்டியுள்ளது. அந்த அரசியல் செல்வாக்கு ஜனாதிபதி தேர்தலிலும் மேலோங்கி நிற்பதற்கான சாத்தியக்கூறுகளே தேர்தலுக்கு முன்னரான அரசியல் களத்தில் தென்படுகின்றன.

தமிழர் தரப்பு அரசியலின் அவல நிலை

உள்ளுராட்சித் தேர்தலின் பின்னர் நாட்டு மக்கள் மத்தியில் தமது செல்வாக்கை வளர்த்தெடுத்து தமக்கான ஆதரவுத் தளத்தை உருவாக்குவதற்கான உருப்படியான அரசியல் நடவடிக்கைகள் எதனையும் ஐக்கிய தேசிய கட்சியும் செய்யவில்லை. சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் செய்யவில்லை. இரண்டு கட்சிகளினதும் தலைவர்கள் தமக்கிடையிலான அரசியல் அதிகாரப் போட்டியில் மூழ்கியிருந்தனரே தவிர அவர்கள், மக்கள் நலன் சார்ந்த, அவர்களின் மனங்களைக் கவரத்தக்க அரசியல் நடவடிக்கைகளில் கவனம் செலுத்தவே இல்லை..

மறுபக்கத்தில் மலைபோல பிரச்சினைகள் தீர்வுக்காகக் குவிந்திருக்கின்ற நிலைப்பாட்டைக் கொண்டுள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அரசாங்கத் தரப்பினரைத் தவிர்ந்த ஏனைய அரசியல் சக்திகளுடன் கைகோர்த்து தமக்குரிய ஆதரவு தளத்தை விரிவுபடுத்தவில்லை. தனத அரசியல் பலத்தைக் கட்டி எழுப்பிக் கொள்வதற்கு உள்ளுர் அரசியல் கட்சிகளுடன் கொள்கை ரீதியில் இறுக்கமான அரசியல் பிணைப்பை உருவாக்கிக் கொள்ளவில்லை. சர்வதேச மட்டத்தில் தென்படுவதாகக் கூறி பெருமை கொள்கின்ற தரப்புக்களுடன் இறுக்கமான உறவுப் பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ளவுமில்லை.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரும், ஏனைய தமிழ்க்கட்சிகளும் ஒருவரை ஒருவர் சாடுவதிலும் ஒருவர் மீது ஒருவர் அரசியல் நிலையில் சேறடித்து போராடுவதிலுமே காலத்தைக் கழித்துள்ளார்கள். அனைவரும் ஒன்றிணைந்து ஜனாதிபதி தேர்தல் என்ற வடிவத்தில் நிர்ப்பந்தங்கள் நிறைந்ததோர் சாதகமற்ற அரசியல் வியூகத்திற்கு முகம் கொடுப்பதற்குத் தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்வதில் உரிய முறையில் கவனம் செலுத்தவில்லை.

மறுபக்கத்தில் பாதிப்புகளுக்கு உள்ளாகிய தமிழ் மக்கள் தன்னெழுச்சி பெற்று போராட்டங்களை முன்னெடுத்துள்ள நிலையில் அவர்களுக்குத் தரமான அரசியல் தலைமைத்துவத்தை வழங்கி வழிநடத்துவதிலும் தமிழ் அரசியல் கட்சிகள் கோட்டை விட்டிருக்கின்றன. தங்களுக்குள் ஒன்றுபடவுமில்லை மக்களை ஒன்றுபடுத்தி அவர்களின் ஒன்றிணைந்த ஆதரவுத் தளத்தை உருவாக்குவதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்கவுமில்லை.

மொத்தத்தில் தமிழ் மக்களை நோக்கி அனைவரும் ஓரணியில் ஒரு தலைமையின ஒன்று திரண்டு தமிழ்த்தரப்பின் ஒன்றுபட்ட சக்தியை அரசாங்கத்திற்கும் சர்வதேசத்திற்கும் வெளிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் அரசியல் அறிவுறுத்தலுமே கீறல் விழுந்த ஒலித்தட்டின் ஓசையாக தமிழ்த்தலைவர்களிடம் இருந்து காலம் காலமாக சோர்வின்றி வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றதே தவிர தமிழ் அரசியல் கட்சிகள் கொள்கை ரீதியாக மக்கள் நலன்களை முதன்மைப்படுத்தி ஒன்றிணைவதற்குத் தயாராக இல்லை.

அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு என்ற ஒற்றுமைக்கும் ஐக்கியத்துக்குமான நிலைப்பாட்டைக் கோட்டை விட்டுவிட்டு சிதறிய நெல்லிக்காய் மூடையாகவே ஜனாதிபதி தேர்தலுக்கு முகம் கொடுக்கப் போகின்ற அவல நிலைமைக்குத் தமிழர் தரப்பு அரசியலை தமிழ் அரசியல் கட்சிகளும் தமிழ் அரசியல் தலைவர்களும் ஆளாக்கியிருக்கின்றார்கள்.

தீக்குளிப்பின் சமிக்ஞையா……….?

பொதுஜன பெரமுன போரக்குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள கோத்தாபாயா ராஜபக்சவை ஜனாதிபதி தேர்தலில் வலிமை மிக்க ஆதரவுத்தள அடையாளத்துடன் வேட்பாளராகப் பெயரிட்டுள்ளது. தமிழ் மக்களின் நலன்களில் ஆரம்பம் முதலே சூழ்ச்சிகரமான முறையில் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ள ஜேவிபியும் அந்தக் கட்சியின் தலைவர் அனுர குமார திசாநாயக்காவை வேட்பளாராக நிறுத்துவதற்கு முடிவு செய்துள்ளது.

இரு தரப்பினருமே தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைக் கருத்திற்கொண்டு உளப்பூர்வமாக அவர்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பார்கள் என்று கூற முடியாது. ஏனெனில் இரண்டு பேருமே கடந்த கால அரசியல் வரலாற்றில் தமிழ் மக்களை நசுக்கி அடக்கி ஒடுக்குக்குகின்ற சக்திகளின் கருவிகளாகவே செயற்பட்டிருக்கின்றார்கள்.

மறுபுறத்தில் தமிழ் மக்களுடைய அரசியல் நலன்களில் மென்போக்கைக் கடைப்பிப்பதாகக் கருதப்படுகின்ற ஐக்கிய தேசிய கட்சி இன்னும் தனது வேட்பாளரைத் தெரிவு செய்யாமல் காலம் கடத்திக் கொண்டிருக்கின்றது. கட்சியின் தீர்மானத்திற்கு முன்னதாக தன்னிச்சையாகத் தன்னையே வேட்பாளராக வெளிப்படுத்திக் கொண்டுள்ள சஜித் பிரேமதாசா தேசிய பிரச்சினைகளில் ஆழ்ந்த அனுபவமும், ஈடுபாடும் கொண்டவராக இன்னும் அடையாளம் காணப்படவில்லை.

அரசியலில் அரிச்சுவடி நிலையில் இருப்பதைப் போன்ற நிலையில் தோற்றம் தந்துள்ள அவரைத்தான் ஐக்கிய தேசியகட்சி அதிகாரபூர்வமாக வேட்பாளராக நியமிக்குமா என்பது தெரியவில்லை. அவ்வாறு நியமித்தாலும்கூட அவர் எந்த அளவுக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளில் ஈடுபாட்டுடன் செயற்படுவார் எந்த வகையிலான உறுதிப்பாட்டுடன் அந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காகப் பாடுபடுவார் என்பதற்கான எந்தவிதமான உத்தரவாதத்தையும் காண முடியவில்லை.

இத்தகைய நிலையில்தான் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா, முன்னாள் வடகிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜப்பெருமாள், விடுதலைப்புலிகளின் முன்னாள் வலிமை மிகுந்த தளபதியான கருணா அம்மான் ஆகியோர் சிங்கள பௌத்த தேசியத் தீவிரப்போக்கைக் கொண்ட பேரின அரசியல் கட்சிகளுக்கு ஆதரவளிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளனர்.

ஆனால் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்கு அவசரப்படத் தேவையில்லை. அதிகாரபூர்வமாக வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டதும் அவர்களுடன் பேச்சுக்கள் நடத்தி ஒரு தீர்மானத்திற்கு வரவுள்ளதாக கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் இந்து நாளிதழுடனான நேர்காணலில் கூறியுள்ளார்.

ஆனால் தமிழ் மக்கள் வேட்பாளர்களாகக் கருதப்படுபவர்கள் வெளிப்படுத்தி வருகின்ற உண்மைக்கு மாறாந நிலைப்பாடுகளினாலும், தமிழர் பிரச்சிகைளைக் கையாள்வதைப் பற்றி வெளிப்படுத்தி வருகின்ற கருத்துக்களினாலும் குழப்பமடைந்து காணப்படுகின்றார்கள். இந்தக் குழப்பமானது அவர்களை தேர்தல்களில் இருந்து ஒதுங்கி இருப்பதற்கான தீரமானத்தை நோக்கி வலிந்து தள்ளிச் செல்வதையே காண முடிகின்றது.

மொத்தத்தில் ஜனாதிபதி தேர்தல் என்பது தமிழ் மக்களைப் பொருத்தமட்டில் இதுகால வரையிலான அரசியல் வரலாற்றில் ஒருபோதும் கண்டறியாத ஒரு தீக்குளிப்பின் சமிக்ஞையாகவே அந்தத் தேர்தலுக்கான முன்கள நிலைமைகள் காட்டி நிற்கின்றன.

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More