தினமலர் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2005ம் ஆண்டு கிருஷ்ணகிரி காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த முத்தமிழ் முதல்வன் என்பவரை அந்த சமயத்தில் வெளியான தினமலர் நாளிதழில் ‘டீக்கடை பெஞ்ச்’ பகுதியில் பெங்களூருவிலிருந்து ஓசூர் வழியாக தமிழகத்திற்கு மதுபானம் கடத்துபவர்களிடம் முத்தமிழ் முதல்வன் லஞ்சம் பெற்றார் எனவும், சட்டவிரோதமான முறையில் சொத்துக்கள் வாங்கினார் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது
இதனையடுத்து, தனக்கு எதிராக அவதூறு பரப்பு விதமாக செய்தி வெளியிட்டதாகக் கூறி 10 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு கோரி தினமலர் நாளிதழுக்கு முத்தமிழ் முதல்வன் கடிதம் அனுப்பிய போதும் தினமலர் நிர்வாகம் அதற்கு பதில் அளிக்காதமையினால் தினமலர் நாளிதழுக்கு எதிராக முத்தமிழ் முதல்வன் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கில் கிருஷ்ணகிரி நீதிமன்றம் நேற்று முன்தினம் வழங்கிய தீர்ப்பில் செய்தி ஆதாரங்களுடன் வெளியிடப்படவில்லை என்றும், யூகங்களின் அடிப்படையில் வெளியிடப்பட்டதாகவும் குறிப்பிட்டதுடன் இதுபோன்ற செய்திகளில் குற்றம்சாட்டுப்படுபவரின் பெயரை நேரடியாக குறிப்பிடமாட்டார்கள். ஆனால், தினமலர் நாளிதழ் காவல் அதிகாரியின் பெயரையே நேரடியாகக் குறிப்பிட்டுள்ளது எனவும் தெரிவித்தது.
இதனையடுத்து, அவதூறு செய்தி வெளியிட்டதற்காக தினமலர் வெளியீட்டாளர் லட்சுமிபதி, ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி ஆகிய 2 பேருக்கும் தலா 2 ஆண்டு சிறை தண்டனையும், தலா 5 லட்சம் ரூபா நஷ்ட ஈடு முத்தமிழ் முதல்வனுக்கு வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார். மேலும் நஷ்ட ஈடு வழங்கவில்லை எனில் மேலும் 3 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். #தினமலர் #ஆசிரியர் #சிறை