தேர்தல் காலத்திலாவது யாழ்ப்பாணம் மீது கரிசனை காட்டுவதையிட்டு மகிழ்ச்சி அடைவதாகவும், யாழ் மாநகர சபை மண்டபம் வெறுமனே சின்னமாக இருக்காது மக்களின் அடிப்படை அரசியல் சிந்தனைகளை மாற்றக் கூடிய வகையில் அமைய வேண்டும் எனவும் வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் குறிப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாண மாநகர மண்டபத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு மாநகர சபை மைத்தானத்தில் இன்று இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், “நாம் பேச்சை குறைத்து கடினமாக உழைக்க வேண்டும். யாழ்ப்பாண மாநகர சபையின் வரலாற்றினை யாரும் மறக்க முடியாது. அது மறக்கக் கூடிய வரலாறு அல்ல. ஏனெனில் அது மக்களின் கண்ணீரிலும் இரத்தத்தினாலும் உறைந்துள்ளது. இப்போது அழிந்த மாநகர சபை மண்டபம் மீண்டும் கட்டியெழுப்படவுள்ளது. இது அபிவிருத்தியில் ஓர் வரலாற்றுத் திருப்பு முனை என்று கூறலாம்.
யாழ்ப்பாண மாநகர சபை இலங்கை சுதந்திரம் அடைந்து ஒரு வார காலத்திலேயே உருவாக்கப்பட்டுவிட்டது. அப்போதிலிருந்தே இயங்கி வந்தது. நாட்டில் இடம்பெற்ற வன்முறையான காலத்தில் மாநகர முதல்வராக இருந்த அல்பிரட் துரையப்பாவும் படுகொலை செய்யப்பட்டார். இவ்வாறாக பல வரலாறுகள் உள்ளது. எனவே இந்த கட்டிடம் அமையப்பெறுவது யாழ்ப்பாணத்தின் அபிவிருத்திப் பயணத்தில் புதிய திருப்பு முனையாக அமைய வேண்டும். வெறுமனே இந்த கட்டிடத்தை கட்டி முடிப்பதுடன் மட்டுமல்லாது வடக்கு மாகாண மக்களுக்கு அதிலும் குறிப்பாக யாழ்ப்பாண மக்களுக்கு ஜனநாயகத்தை கட்டியெழுப்பும் கேந்திர நிலையமாக யாழ் மாநகர சபை மண்டபம் அமைய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.