யாழ்ப்பாணம், கந்தர்மடம் – பலாலி வீதியில் உள்ள தொலைபேசி விற்பனை நிலையத்திற்குள் புகுந்து சுமார் 6 லட்சம் ரூபா பெறுமதியான அதிதிறன் தொலைபேசிகளைத் திருடிச் சென்ற குற்றச்சாட்டில் இருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
“தொலைபேசி விற்பனை நிலையத்திலிருந்து திருடிய தொலைபேசி ஒன்றில் சிம் அட்டையைப் பயன்படுத்தப்பட்டது.
தொலைபேசியின் எமி (EMI) இலக்கத்தை வைத்து அதனைப் பயன்படுத்துபவர் கண்டறியப்பட்டார். அவரை காவல்துறை புலனாய்வுப் பிரிவினர் கைது செய்தனர். அவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் மற்றைய சந்தேகநபரும் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட இருவரும் 19 மற்றும் 20 வயதுடையவர்கள். அவர்கள் கோப்பாயைச் சேர்ந்தவர்கள். சந்தேகநபர்களிடமிருந்து 10 அலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன” என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
கந்தர்மடம் பலாலி வீதியின் ஆலடிப் பகுதியில் அமைந்துள்ள தொலைபேசி விற்பனை நிலையத்திற்குள் கடந்த 31ஆம் திகதி அதிகாலை 1.30 மணியளவில் கதவுடைத்து உட்புகுந்த திருடர்கள் விலை உயர்ந்த தொலைபேசிகளை திருடிச் சென்றனர்.