அறிவுருவாக்கம் பல்வகைப்பட்ட முறைமைகளில் நிகழ்ந்தேறி வருகின்றது. ஆயினும் நவீனமயமாக்கம் என்னும் காலனியமயமாக்கம் அறிவுருவாக்கம் என்பதை எழுத்தின் வழியானதென உறுதிப்படுத்தி வைத்திருக்கிறது. அச்சில் வரும் எழுத்துதான் அறுதியானது என்பது நவீனமயமாக்கும் வடிவமைத்திருக்கும் உலகம்.
காலனியப்படுத்தல் மூலம் உலகின் பல பகுதிகளை சுரண்டலுக்கு உட்படுத்திய மேற்கைரோப்பிய நாடுகள் தங்களது மேலாதிக்கத்தை தொடர்ந்து நீண்ட காலத்திற்கு தக்கவைத்திருப்பதற்கான உபாயமாகவே நவீன கல்வி வழியாக தமது நோக்கத்தை நிறைவேற்றி அதன் பயன்களை இன்றுவரை புதிய புதிய வழிகளில் அனுபவித்து வருகின்றனர்.
அந்த வகையில் அறிவுருவாக்கம் என்பது மேற்கைரோப்பிய மையப்படுத்தப்பட்டு அதன் முகவர் நிறுவனங்களாக இயங்கிவரும் கல்வி நிறுவனங்கள் வழியாக நிலைநிறுத்தப்படுவது நவீன கல்வியாக இருந்து வருகிறது. ஆங்கிலக் கற்கைகளை பிரித்தானியாவில் அறிமுகப்படுத்தமுன் இந்தியாவில் அறிமுகப்படுத்தினர் என்பது வரலாறு.
இராணுவ ரீதியாக தமது மேலாதிக்கத்தை நிறுவிய மேற்கைரோப்பியர்கள் அறிமுகப்படுத்திய கல்வி, மொழி, மதம், என்பவற்றிக்கூடாக மேலாதிக்கத்தை நிலைநிற்கும் வகை செய்தனர்.
காலனியத்திற்கு எதிராக தேசிய விடுதலைப் போராட்டங்கள் வெற்றி பெற்று சுகந்திர நாடுகள் உருவாகின. அவற்றுள் சில தமக்கான பொருளாதார, அரசியல், தத்துவ நிலைப்பாடுகளை எடுத்துக்கொண்டன. ஆயினும் இத்தகைய தலைமைத்துவங்கள் பதவி கவிழ்க்கப்பட்டன அல்லது கொல்லப்பட்டன.
காலனிய நலனுக்கு சேவை செய்யக் கூடிய சர்வாதிகார அல்லது இராணுவ அரசாங்கங்கள் தோற்றுவிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டன. இவற்றின் மூலமாகவும் உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் என்பவற்றின் மூலமாகவும் தேசிய விடுதலைப் போராட்டத்தில் வெற்றி பெற்று சுதந்திர அரசுகளை நிறுவிய நாடுகள் நவ காலனித்துவத்துள் கொண்டுவரப்பட்டன.
இராணுவ ரீதியாக வல்லமை பெற்ற நாடுகளின் அரசியல் பொருளாதார நலன்கள் அல்லது நிகழ்ச்சி நிரலுக்கு உரிய வகையிலேயே உலக இயக்கம் தீர்மானிக்கப்பட்டிருக்கின்ற சூழ்நிலையில் காலனிய நீக்கங்களுக்கான அரசியல், அறிவியல் முன்னெடுப்புக்களும் மிகவும் வலுவாக நிகழ்ந்து வருகின்றன.
அந்த வகையில் எழுத்தின், அச்சின் அதிகாரம் கேள்விக்கு உள்ளாக்கப்படுவதும் நிகழ்ந்து வருகின்றது. அனைத்து அறிவுத் துறைகளிலும் வாய்மொழி வழக்காற்று அறிவு முறைகள் உள்வாங்கப்படுவது நிகழ்ந்து வருகிறது.
வாய்மொழி வழக்காற்று அறிவு முறைகளை நிராகரித்ததன் வாயிலாக காலனியம் தனக்குரிய அறிவுமுறையை நவீனமயமானது, விஞ்ஞானபூர்வமானது, அறிவுபூர்வமானது என்ற பெயர்களில் அதிகாரபூர்வமாக்கிக் கொண்டது. காலனியம் அறிமுகப்படுத்திய கல்வி நிறுவனங்கள் இன்றைவரை இதனைக் கச்சிதமாக முன்னெடுத்து வருகின்றன.
எழுத்து மரபல்லாத அறிவு முறைமைகள் குறிப்பாக வாய்மொழி வழக்காற்று அறிவு முறைகள் இற்றைவரை பல்கலைக்கழகங்களுக்கு வெளியானதாகவே இருந்து வருகின்றன. இந்த வகையிலான அறிவு முறைமைகள் அறிவுபூர்மற்றதாகவும் இந்த அறிவு முறைக்குச் சொந்தக்காரர்கள் பாமரர்களாகவும் முத்திரை குத்தப்பட்டு நிராகரிக்கப்பட்டவர்களாகக் காணப்படுகிறார்கள்.
இத்தகையதொரு பின்னனியில் வாய்மொழி வழக்காற்று அறிவு முறைகள் காலனியத்துவ நீக்கச் செயற்பாடுகளின் அம்சமாக கொள்ளப்பட்டு நடைமுறைக்கு கொண்டு வருவது நிகழ்ந்து வருகிறது. விஞ்ஞானபூர்வம், அறிவூபூர்வம் என்று நவீன அறிவுப்புலத்தில் உரையாடப்பட்டு வந்தாலும் உள்ளூர் அறிவு மரபுகள் அல்லது முறைமைகள் குறிப்பாக வாய்மொழி வழக்காற்று முறைமைகள் கேள்விக்கிடமற்ற வகையிலேயே நிராகரிக்கப்பட்டு வந்திருக்கிறது.
இதற்கு மாற்றாக எந்த அறிவு முறைமைகளாயினும் கேள்விக்குட்படுத்தப்பட்டு உள்வாங்கப்படுவதன் முக்கியத்துவம் கவனத்திற் கொள்ளப்படுகின்றது. இது நவீன மற்றும் மரபு அல்லது உள்ளூர் அறிவுமுறைமைகளுக்கும் ஒருசேரப் பொருந்துவதாக இருக்கும்.
இந்தப் பின்னணியில் இதுவரையில் நிராகரிப்புக்கு உள்ளாகி வந்த வாய்மொழி வழக்காற்று முறைமைகளை பொதுவெளிக்குக் கொண்டு வருதலும், அவை பற்றிய நேரடி அறிதல்களைச் சத்தியமாக்குவதும் அவசியமாகும். இது வாய்மொழி வழக்காற்று அறிவுமுறைகளின் சமகாலத்தேவை, கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள், கேள்விக்குட்படுத்த வேண்டிய விடயங்கள் பற்றிய உரையாடல் வழி முன்னெடுப்புக்களைச் சாத்தியமாக்கும்.
அந்த வகையில் பல்வகைபட்ட வாய்மொழி வழக்காற்று அறிவு முறைமைகளையும் அவற்றின் தன்மை அறிந்து நிகழ்த்துகைக்கும் உரையாடலுக்கும் கொண்டுவரும் களமாக வாய்மொழி அறிவியல் திருவிழா காட்சி கொள்ளும்.
கவிபடிப்போர், கதை சொல்வோர், விடுகதை சொல்வோர், புதிர்போடுவோர், அம்மானை காவியம் படிப்போர், கைவைத்தியம் சொல்வோர், விசக்கடி பார்ப்போர், மருத்துவம் செய்வோர், படடி வளர்ப்போர், வேளாண்மை செய்வோர், வாத்தியம் செய்வோர், மீன்பிடி பார்ப்போர், கைத்தொழில் செய்வோர் எனப் பலதுறை அறிவுடையோர் கூடிப் பகிரும் களமாக வாய்மொழி அறிவியல் திருவிழா அமையும்.
கலாநிதி ஜெயசங்கர் சிவஞானம்…