கலாநிதிசி.ஜெயசங்கர்…
யாழ்ப்பாணப் புத்தக திருவிழா பல வழிகளில் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சியாக அமைகிறது. வீட்டுக்கு வீடு புத்தக அலுமாரிகளைக் கொண்ட யாழ்ப்பாணச் சமூகத்தின் புதிய தோற்றப்பாடாக இந்தப் புத்தகத் திருவிழாவைக் கொள்ள முடியும்.
இத்திருவிழா உள்ளூர் எழுத்தாளர்களை,உள்ளூர் பதிப்பாளர்களை வலுப்படுத்துவதாக வடிவமைப்பது அவசியமாகும். உள்ளூர் படைப்பாளர்கள், பதிப்பாளர்கள், நூலகங்கள், புத்தக விற்பனையாளர்கள், முகவர்கள், வாசகர்கள் சங்கமிக்கும் களமாகவும்; ஈழத்தமிழர்தம் வாழ்வியல், அறிவியல் காணவும் கற்கவும்வருகை தரும் பிறரும் சங்கமிக்கும் இடமாகவும் யாழ்.புத்தக திருவிழா அமைவது மிகவும் பொருத்தமானதெனக் கருத முடிகின்றது.
பங்களாதேசின் விடுதலையைக் கொண்டாடும் கலைத் திருவிழாக்களில் புத்தகத் திருவிழாவும் ஒன்றாகும். இப்புத்தகத் திருவிழாவில் பங்காள மொழியில் அமைந்த நூல்களும் சஞ்சிகைகளும், இருவட்டுகளும் மட்டுமே விற்பனைக்குக் கொண்டு வரப்படும். கலை இலக்கியப் பத்திரிகைகள் குறிப்பாகச் சிறுசஞ்சிகைகளுக்கென தனியான இடம் வழங்கப்பட்டிருக்கும்.
பங்களா மொழியின் வல்லபத்தை காணவும், காட்டவும் மேலும் முன்னெடுப்புக்களுக்கான அறிதல்களுக்கும் இப்பெரும் புத்தகத் திருவிழா சாட்சியாகவும் களமாகவும் இருந்து வருகிறது. ஈழத்தமிழர்கள் மத்தியில் அச்சகங்கள் பதிப்பகங்களாகப் பெரும் பணியாற்றிய வரலாறுண்டு. இது ஆய்வு செய்யப்பட வேண்டியது. உதாரணமாக கூத்து நூல்களைப் பதிப்பித்தலில் ஆசிர்வாதம் அச்சகத்தின் பணி மிகவும் சிறப்புமிக்கது.
சமகாலத்தில் பூபாலசிங்கம் குமரன் , சேமமடு பதிப்பகங்கள் பல்வேறு வழிகளில் ஈழத்தவர் தமிழ்நூல் பதிப்பில் முக்கிய பங்காற்றி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. இந்து கலாசார திணைக்களத்தின் பதிப்புக்கள் பிரமாண்டமானவை. சிறுசஞ்சிகைகளான மல்லிகை, அலை, மூன்றாவது மனிதன், ஜீவநதி, ஞானம், மகுடம், மூன்றாவது கண் என்பனவும் பதிப்பக்கத்தில் ஈடுபட்டு வருகின்றன. துனரவி பதிப்பகத்தின் பணிகள் குறிப்பிடப்பட வேண்டியது இவை தவிரவும் பல்வேறு பதிப்பு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவை தவிர கடந்த காலங்களில் சிறப்பான பதிப்பு முயற்சிகளில் ஈடுபட்ட மட்டக்களப்பின் இளம்பிறை றகுமான் பதிப்புக்கள், தமிழியல் பதிப்புக்கள் என்பவற்றின் மீள்பதிப்புகளுக்கான வாய்ப்புகளை கவனத்திற் கொள்வதும் தேவையாகிறது.
இந்த முயற்சிகள் வலுப்பெறும் வகையில் யாழ்.புத்தக திருவிழா அமைவது விரும்பத்தக்கது. உள்ளூர் எழுத்துகள், பதிப்புகள் இலங்கைத் தீவிற்குள்ளேயே பரவலாக்கம் அடைவதற்கான சாத்தியப்பாடுகள் எதுவுமே இல்லாத நிலையில், இந்த நிலைமையை மாற்றுவதற்கான செயற்பாட்டு மையமாக யாழ்.புத்தகத் திருவிழா அமைவது மிகப்பொருத்தமானது என்றே கருத முடிகிறது.
குறிப்பாக அறிவியல் ஆக்கங்கள், மொழிபெயர்ப்புக்கள் என்பவை முக்கியத்துவம் கொடுக்கப்படுவது மகவும் அவசியமாகும். புலம்பெயர் நாடுகளின் ஆக்கங்கள், மொழிபெயர்ப்புக்கள் சிறப்பிடம் பெறுவது தமிழின் உலகளந்த அறிவுக் கொள்ளலுக்கு சாத்திமாகிறது.
ஈழத்தமிழர்தம் வாழ்வியல் சார்ந்து பிறதேசத்து அறிஞர்தம் படைப்புகள், ஆய்வுகள் மேற்படி அறிஞர்களின் ஊடாட்டக் களமாக யாழ்.புத்தக திருவிழா வடிவம் பெறுவது அதனை அறிவு மையமாக பரிணமிக்கச் செய்வதன் பாற்படும்.
ஈழத்தமிழ் அறிஞர் மற்றும் படைப்பாளரது ஆக்கங்கள் பல கையெழுத்துப் பனுவல்களாகவே நீண்ட காலத்துக்கு கிடந்தது வருகின்றன. இவற்றினைத் தேடிப் பதிப்பிப்பது முக்கிய பணியாக இருக்கிறது. உதாரணமாகக் குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்களது நாடகப் பனுவல்கள் நூற்றுக்கணக்கில் உள்ளன. அவர் மொழிபெயர்த்திருக்கும் உலகத்தரம் வாய்ந்த நாடகப் பனுவல்கள் ஐம்பதுக்கு மேற்பட்டு அவரிடம் உள்ளன. இது போலப் பல விடயங்கள் பதிப்பித்தலுக்கும் பரவலாக்கத்திற்கும் வேண்டி நிற்கின்றன.
ஈழத்தமிழர்தம் வாழ்வியல், அறிவுருவாக்கம், படைப்பாக்கம் என்பவற்றின் ஊடாடத்திற்கும், பரவலாக்கத்திற்குமான பெரும் சந்திப்பாக யாழ். புத்தக திருவிழா மையமாக இயங்குவது விருப்பத்துடன் எதிர்பாக்கப்படுகிறது.
கலாநிதிசி.ஜெயசங்கர்