Home இலங்கை இலங்கையின் போர்காலத்திலும், அரசு தொலைக்காட்சி கட்டுப்பாட்டுள் வரவில்லையே…

இலங்கையின் போர்காலத்திலும், அரசு தொலைக்காட்சி கட்டுப்பாட்டுள் வரவில்லையே…

by admin

இலங்கை அரசாங்கத் தொலைக்காட்சி சேவையான இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தைப் பாதுகாப்பு அமைச்சின் கீழ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளமை தொடர்பில் தற்போது அதிகளவில் பேசப்பட்டு வருகின்றது.

ஊடகத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தை, பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எவ்வாறு தனது ஆளுகைக்குள் கொண்டு வந்துள்ளார் என பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் 1982 ஆம் ஆண்டு 6 ஆம் இலக்க சட்டத்தின் கீழேயே, இலங்கையிலுள்ள அனைத்து தொலைக்காட்சி சேவைகளுக்குமான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

இந்த நிலையில், பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தைத் தனது அமைச்சின் கீழ் கொண்டு வந்தமையின் ஊடாக, இலங்கையிலுள்ள தனியார் ஊடக நிறுவனங்களையும் தனது அதிகாரத்திற்குள் கொண்டு வந்துள்ளார் என பல்வேறு தரப்பினரும் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

ஊடகத்துறை அமைச்சின் கீழ் இதுவரை காலம் செயற்பட்டு வந்த இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாதுகாப்பு அமைச்சின் கீழ் கடந்த 9 ஆம் திகதி கொண்டு வந்திருந்தார்.

அரசாங்கத்தினால் கடந்த 9 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக, பாதுகாப்பு அமைச்சின் கீழ் இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் கொண்டு வரப்பட்டிருந்தது.

´´தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தி, மக்களுக்கிடையே சமாதானம், ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தைக் கட்புல மற்றும் செவிப்புல ஊடகங்களைப் பயன்படுத்துவதன் மூலம் விருத்தி செய்வதற்கும், அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மக்களின் நல்ரசனையை விருத்தி செய்வதற்கும் உயர்மட்ட ஊடக ஒழுக்கப் பண்பாட்டை ஏற்படுத்துவதற்கும் தேவையான நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்” என்ற காரணத்தை முன்னிலைப்படுத்தியே இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டதாக ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் செயற்றிறன் இல்லாத நிர்வாகத்தை விலக்கி, திறமையான நிர்வாகம் ஒன்றை ஏற்படுத்துவதற்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், அதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே தடையாக இருந்ததாக ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவிக்கின்றார்.

ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம், திறைசேரிக்கு சிரமங்களை கொடுக்கும் வகையில் மாதாந்தம் 5 கோடி ரூபா நட்டத்தில் இயங்கி வருகின்றமையை கணக்காய்வாளர் அறிக்கையில் தெளிவூட்டப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், அதிவிசேட வர்த்தமானி ஒன்றின் ஊடாக இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தை, ஊடகத்துறை அமைச்சிடமிருந்து பாதுகாப்பு அமைச்சுக்கு பொறுப்பேற்றமையானது, சர்ச்சைக்குரிய விடயம் என இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன கூறியுள்ளார்.

இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் கூட, இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம், பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்படவில்லை என்பதை மிக வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதியின் செயற்பாடானது, ஊடக சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்ற கருத்தை நிறுத்த முடியாது எனவும் ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் தெரிவிக்கின்றார்.

இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தை தன்னிடம் இருந்து பெற்றுக் கொள்வதற்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனக்கு அறிவித்திருக்க வேண்டும் எனவும் ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன கூறியுள்ளார்.

இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தை, பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வந்த நடவடிக்கையானது ஊடக சுதந்திரத்தைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த செயற்பாடாகவே தாம் கருதுவதாக இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் தெரிவிக்கின்றது. இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் சிவராஜா ராமசாமி பிபிசி தமிழுக்கு இதனைக் குறிப்பிட்டார்.

இலங்கையில் எதிர்வரும் சில மாதங்களில் ஜனாதிபதித் தேர்தல் ஒன்று நடத்தப்படவுள்ள பின்னணியில், நாட்டின் தேசிய தொலைக்காட்சி சேவையைப் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வந்துள்ளமையானது, ஊடக சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலானது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனச் சட்டத்தின் கீழ் இலங்கையிலுள்ள தனியார் தொலைக்காட்சி சேவைகள் பதிவு செய்யப்பட்டுள்ளமையினால், இந்த நடவடிக்கையானது ஏனைய தனியார் தொலைக்காட்சிகளுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் செயற்பாடு எனக் கருதுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சின் கீழ் இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் கொண்டு வரப்பட்டமையை தாம் ஏற்றுக் கொள்ளவில்லை எனவும், இந்த நடவடிக்கையை மீள் பரிசீலனை செய்யுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுவதாகவும் ஒன்றியத்தின் தலைவர் சிவராஜா ராமசாமி கூறினார்.

இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தை மீண்டும் ஊடகத்துறை அமைச்சின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுப்பதே, நல்லாட்சிக்கான அடையாளமாக இருக்கும் என இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் சிவராஜா ராமசாமி தெரிவிக்கின்றார்.

அதிவிசேட வர்த்தமானியின் ஊடாக இலங்கை ருபவாஹினிக் கூட்டுத்தாபனம், பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டமையை தாம் வன்மையாகக் கண்டிப்பதாக இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம் தெரிவிக்கின்றது. இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலைமையானது ஊடக சுதந்திரத்திற்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அமைந்துள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ள இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம், இதனூடாக ஜனாதிபதி தவறான வழிநடத்தலை மேற்கொண்டுள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தைப் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வந்துள்ளதை அடுத்து, அங்கு பணியாற்றும் ஊடகவியலாளர்களுக்குச் சுயாதீனமாகச் செயற்பட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் உள்ளிட்ட பல தேர்தல்கள் எதிர்வரும் சில காலங்களில் நடைபெறவுள்ள பின்னணியில் ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எட்டியுள்ளவையானது, தமக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம் குறிப்பிடுகின்றது.

இந்த விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தி, இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தை மீண்டும் ஊடகத்துறை அமைச்சின் கீழ் கொண்டு வரநடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம் அறிக்கையின் ஊடாக கேட்டுக்கொண்டுள்ளது.

அமைச்சரவைக்கு பொறுப்பான பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் அனுமதி பெறாது, இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தை ஊடகத்துறை அமைச்சிடமிருந்து பெற்று, அதனை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வந்தமையானது தவறானது என சிரேஷ்ட சட்டத்தரணி இளையதம்பி தம்பையா பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்திற்கு அமைய, அமைச்சுக்களில் காணப்படுகின்ற விடயதானங்களில் மாற்றங்களை கொண்டு வர ஜனாதிபதி, பிரதமரின் அனுமதியை பெற வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் அவசரக் காலச் சட்டம் இல்லாத இந்த சூழ்நிலையில் ஊடக, அவசர காலச் சட்டத்தின் செயற்பாடுகள் நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் கவலை வெளியிட்டார்.

இலங்கையில் அவசர காலச் சட்டம் அமல்படுத்தப்பட்ட காலத்தில் இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தை தனது பொறுப்பிற்கு எடுத்திருந்தால் கூட அதனை ஏற்றுக் கொள்ள முடியும் எனக் கூறிய அவர், அவசர காலச் சட்டம் ரத்து செய்யப்பட்ட பின்னணியில் ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டமை பிரச்சினைக்குரிய விடயம் என அவர் சுட்டிக்காட்டினார்.

பாதுகாப்பு அமைச்சின் கீழ் இல்லாத விடயதானம் ஒன்றை, அதனுள் கொண்டு வருவதானது, நாட்டின் ஜனநாயகத்திற்கு பாதிப்பான விடயம் என சிரேஷ்ட சட்டத்தரணி இளையதம்பி தம்பையா தெரிவித்தார்.

இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம், பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டமையானது, எந்தவொரு தனியார் தொலைக்காட்சி சேவைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தாது என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது. அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக்க கலுவெவ பி.பி.சி தமிழுக்கு இதனைக் குறிப்பிட்டார்.

இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபன சட்டத்தின் பிரகாரமே தனியார் தொலைக்காட்சிகளுக்கு அனுமதிப் பத்திரம் வழங்கப்படுவதாக சுட்டிக்காட்டிய அவர், ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தைப் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வந்ததன் ஊடாக தனியார் தொலைக்காட்சிகளுக்கு எந்தவித அச்சுறுத்தலும் கிடையாது என கூறினார்.

(பிபிசி )

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More