அமெரிக்கா மீது தாக்குதல் நடத்துமாறு அல்கொய்தா தலைவர் ஆதரவாளர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந் திகதி நியூயோர்க்கில் உள்ள உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுர கட்டிடத்தின் மீதும், ராணுவ தலைமையகமான பென்டகன் மீதும் அல்கொய்தா பயங்கரவாதிகள் விமானங்களை மோதி தாக்குதல் நடத்தியதில் சுமார் 3 ஆயிரம் பேர் கொல்லப்பட்டிருந்தனர்.
இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட அல்கொய்தா இயக்கத்தின் தலைவரான ஒசாமா பின்லேடன் 10 ஆண்டுகள் தேடுதல் நடவடிக்கைக்கு பின்னர் பாகிஸ்தானில் வைத்து அமெரிக்கப் படையினரால் கடந்த 2011-ம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் இரட்டை கோபுர தாக்குதலின் 18-வது ஆண்டு நினைவு தினம் நேற்று முன்தினம் அனுசரிக்கப்பட்டதனையடுத்து அல்கொய்தா அமைப்பின் தற்போதைய தலைவரான 68 வயதான அல் ஜவாஹிரி வெளியிட்டு வீடியோ ஒன்றிலேயே இந்த உத்தரவினைப் பிறப்பித்துள்ளார்.
33 நிமிடங்கள் 28 வினாடிகள் ஓடக்கூடிய இந்த வீடியோவில் பல்வேறு விடயங்களைக் குறிப்பிட்டு பேசியிருக்கும் அல் ஜவாஹிரி, அமெரிக்கா, இஸ்ரேல், ரஸ்யா மற்றும் ஐரோப்பிய நாடுகள் மீது தாக்குதல் நடத்துமாறு அல்கொய்தா ஆதரவாளர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
உலகின் கிழக்கில் இருந்து மேற்கு வரை அமெரிக்க ராணுவம் பரவி இருக்கிறது. உங்களின் நாடுகள் அமெரிக்கர்களால் சிதறியடிக்கப்படுகின்றன, ஊழல் பரப்பி விடப்படுகின்றன. இதை தடுக்க அல்கொய்தா அமைப்பில் உள்ளவர்கள் அமெரிக்கா, இஸ்ரேல், ரஸ்யா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராக தாக்குதலை தீவிரப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
எகிப்தை சேர்ந்த மருத்துவரான அல் ஜவாஹிரி, ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டதற்கு பின்னர் அல்கொய்தா அமைப்பின் தலைவரானார் இவர் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பதுங்கியிருக்கக்கூடும் என நம்பப்படுகிறது #அமெரிக்கா #தாக்குதல் #அல்கொய்தா #உத்தரவு #அல்ஜவாஹிரி