படையினரிடம் உள்ள காணிகள் – வடமாகாண ஆளுநர் அலுவலக அறிக்கை
படைத்தரப்பு மற்றும் காவற்துறையினரால் பயன்படுத்தப்படும் வடமாகாணத்தில் உள்ள தனியார் காணிகளை அடையாளம் கண்டு அவற்றை துரிதகதியில் மீள கையளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வடமாகாண ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஆளுநர் அலுவலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கை
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் துரிதப்படுத்தப்பட்ட திட்டத்தின் கீழ் வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனினால் படைத்தரப்பு மற்றும் காவற்துறையினரால் பயன்படுத்தப்படும் வடமாகாணத்தில் உள்ள தனியார் காணிகளை அடையாளம் கண்டு அவற்றை துரிதகதியில் மீள கையளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஏற்கனவே, ஆளுநரினால் யாழ். மாவட்டத்தில் உள்ள தனியார் காணிகளை அடையாளம் கண்டு அவற்றை துரிதகதியில் மீள கையளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு மீள் உரிமைகோரல் விண்ணப்பப்படிவங்கள் பொதுமக்களிடம் இருந்து சேகரிக்கப்படுக் கொண்டிருக்கின்றன.
இந்த திட்டத்தின் அடிப்படையில் அடுத்த கட்டமாக ஏனைய மாவட்டங்களிலும் முப்படையினர் மற்றும் பொலிஸார் நிலைகொண்டுள்ள தனியார் காணிகள் தொடர்பான விபரங்களை காணிகளின் உரித்தாளர்கள் அறியத்தருவதன் மூலம் அவர்கள் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வசிப்பவர்களாயின் அவர்களும் தமது காணிகளை அடையாளப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இதற்காக தயாரிக்கப்பட்ட விசேட விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்து உரிமைகோரலுக்கான தகுந்த ஆதாரத்துடன் அல்லது தகுந்த விளக்கத்துடன் மீளப்பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு காணி உரிமையாளர்களை கேட்டுக்கொள்கின்றோம்.
குறித்த விண்ணப்பப் படிவத்தினை ஆளுநர் செயலகம், மாவட்ட செயலகம் , பிரதேச செயலகம் மற்றும் வடமாகாண சபையின் np.gov.lk இணையத்தளத்திலும் பெற்றுக்கொள்ள முடியும்.
காணி உறுதியின் பிரதியுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவங்களை இணைத்து எதிர்வரும் செப்டம்பர் 20 ஆம் திகதிக்கு முன்னர் ´காணி கோரல் ´ வட மாகாண ஆளுநர் செயலகம், பழைய பூங்கா, சுண்டுக்குளி , யாழ்ப்பாணம் என்னும் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் என குறித்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Add Comment