தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வை வலியுறுத்தியும்,   சர்வதேசத்துக்கு வெளிப்படுத்தும் வகையிலும், வடக்கில் இன்று ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை  பாதிப்படைந்தது.  தமிழ் மக்கள் பேரவையினால் யாழ்ப்பாணத்தில் இன்று காலை எழுக தமிழ் பேரணி நடத்தப்படுவதற்காக வடக்கில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது . யாழ்ப்பாணம் நகரம் மற்றும் சில பகுதிகளில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளதுடன், போக்குவரத்துச் சேவைகளும் இடம்பெறவில்லை. சந்தைகள் தனியார் பஸ் சேவைகள் இயங்கவில்லை பாடசாலைகள் நடைபெறும் என வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் அறிவித்திருந்த போதிலும் மாணவர்களின் வரவு மிகக்குறைவாகவே இருந்து. வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரனை இணைத் தலைவராக கொண்ட, தமிழ் மக்கள் பேரவை  இந்த எழுக தமிழ் பேரணியை ஏற்பாடு செய்திருந்தது.. அரசியல் தீர்வு மற்றும் தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை விரும்பும் தமிழ் மக்களின் வலிமையைக் காண்பிக்கும் வகையில் இந்தப் பேரணி அமையும் என தமிழ் மக்கள் பேரவை   தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.